Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM
நடந்து முடிந்த மாநில தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையாக வெற்றிபெற்றிருப்பதை அடுத்து இந்திய சந்தைகள் இந்த வாரத்தில் நல்ல ஏற்றும் பெறும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறுகிய காலத்தில் இந்திய சந்தைகள் ஏற்றும் பெரும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
‘திங்கள் கிழமை சந்தை ‘கேப்-ஓபனிங்’ நடந்து புதிய உச்சத்தை தொடும் என்றும், இதற்கு அடுத்த பெரிய ஏற்றம், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில்தான் இருக்கும்’ என்று ஆஷிகா ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் பாரஸ் போத்ரா தெரிவித்தார்.
‘காங்கிரஸ் ஜெயிக்கிறதா அல்லது பி.ஜே.பி. ஜெயிக்கிறதா என்பது சந்தைக்கு முக்கியம் அல்ல, சந்தையின் ஏற்றத்துக்கு நிலையான அரசு தேவை என்று ஈநாம் ஃபைனான்ஸியல் நிறுவனத்தின் பன்சாலி தெரிவித்தார். இருந்தாலும் கூட தற்போதைய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
மேலும், ஐ.ஐ.பி. எண்கள், நுகர்வோர் விலை குறியீட்டு எண்கள், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை உள்ளிட்டவைகளைப் பொருத்துதான் இந்திய சந்தைகள் இருக்கும் என்றார்.
‘’ முதலீட்டாளர்களின் மனநிலை நன்றாக இருக்கிறது. அதனால் சந்தை திங்கட்கிழமை உயரும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், சந்தை அதிகமாக உயரும் போது முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுக்கவும் வாய்ப்பு உண்டு” என்று ஆக்மெண்ட் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் கஜேந்திர நாக்பால் தெரிவித்தார்.
கோட்டக் செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் தீபன் ஷா கூறும் போது குறுகிய காலத்தில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் நடவடிக்கை ஆகியவற்றை பொறுத்தே இருக்கும் என்றார்.
‘இப்போதைக்கு இந்திய சந்தை கொஞ்சம் ஸ்திரமற்ற நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தையின் செயல்பாடு இருக்கும்’’ என்று வெராசிட்டி புரோக்கிங் நிறுவனத்தின் ஜிக்னேஷ் சௌத்திரி தெரிவித்தார்.
நிஃப்டி 6700
மற்றொரு முன்னணி புரோக்கிங் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரெட்டிஸ் வரும் பொதுத்தேர்தலுக்குள் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6700 புள்ளிகளுக்கு செல்லும் என்று சொல்லி இருக்கிறது.
தற்போதைய நிலையில் 6300 புள்ளிகளில் சந்தையில் ஒரு ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. இருந்தாலும் கூட அடுத்த பொதுத் தேர்தலுக்குள் 6700 புள்ளிகளை அடையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது.
தவிர பன்னாட்டு புரோக்கிங் நிறுவனமான நொமுரா, சி.எல்.எஸ்.ஏ, கோல்ட்மென் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பி.ஜே.பி. தலைமையிலான அரசு அமையும் போது சந்தை உயரும் என்று ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்கள்.
சந்தை உயர்ந்து வருவதால் ரிடெய்ல் பிஸினஸ் நன்றாக இருப்பதாகவும், கடந்த மாதத்தில் மட்டும் 28,000 புதிய வாடிக்கையாளர்கள் வந்திருப்பதாக்வும் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரெட்டீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
சந்தை மதிப்பு உயர்வு
கடந்த வாரத்தில் சந்தை உயர்ந்ததால் 6 முக்கிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.34,383 கோடி அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சென்செக்ஸும் ஒரு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
கோல் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ., பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது. மாறாக, ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., இன்ஃபோஸிஸ் மற்றும் டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சிறிதளவு சரிந்திருக்கிறது.
சந்தை மதிப்பில் முதல் பத்து இடங்கள் இருக்கும் நிறுவனங்கள் பின்வருமாறு: டி.சி.எஸ்., ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., இன்ஃபோஸிஸ், கோல் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எஸ்.பி.ஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT