Published : 13 Jan 2014 10:49 AM
Last Updated : 13 Jan 2014 10:49 AM
10/1/14 அன்று, சென்செக்ஸ் புள்ளி 20758-ல் முடிவடைந்துள்ளது, இது 6 வருடம் (11/1/2008) முன்பு 20827 புள்ளிகளாக இருந்தது. ஒரு பொருள் 6 வருடத்திற்கு முன்பு விற்ற விலைக்கு தற்போது கிடைத்தால் அது ஒரு அரிய வாய்ப்பா இல்லை மீண்டும் அதே விலை, இனிமேல் மேலே போக வாய்ப்பில்லை என்று வெளியேற வேண்டுமா? இதற்கான பதில் உங்களிடம்தான் உள்ளது, உங்களை ஒருமுறை நீங்களே கேட்டுகொள்ளுங்கள், பின் உங்களின் உள் மனது என்ன சொல்கிறது என்று பாருங்கள், அது கண்டிப்பாக, இது அரிய வாய்ப்பு என்றே சொல்லும்.
இதுவே தங்கம் விலை கொஞ்சம் கீழே இறங்கினால் கூட, அது உடனே மேலே வந்துவிடும் அதனால் உடனடியாக வாங்கவேண்டும் என நினைக்கிறார்கள். முதலீட்டின் தன்மையை விட ஒருவரது விருப்பமே மேலோங்கி உள்ளது. முதலீடு என்பது நம்முடைய விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை. முதலீட்டை பற்றியும் அது செயல்படுகின்ற திறனையும் பெரும்பாலோர் பார்ப்பதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். சந்தையின் இன்றைய நிலை கண்டிப்பாக நம் எல்லோர் கண் முன்னாலும் இருக்கின்ற மிகப்பெரிய வாய்ப்பு.
நிறைய பேர் தங்களுடைய முதலீட்டைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள் எந்த சென்செக்ஸ் புள்ளியில் முதலீடு செய்தார்கள் என்பதை பொறுத்தே அதை எடுப்பதை பற்றி யோசிக்கிறார்கள். ஆனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எல்லாம் சென்செக்ஸ் குறியீட்டை ஒட்டி முதலீடு செயல்படுவதில்லை என்பதை உணரவேண்டும். உதாரணமாக கடந்த 6 வருடத்தில் சென்செக்ஸ் குறியீடு அதே இடத்தில்தான் உள்ளது, ஆனால் இது மியூச்சுவல் ஃபண்டில் 4% கூட்டு வட்டி முதல் 8% கூட்டு வட்டி வரை கிடைத்திருக்கிறது. அதே சமயம் எஸ் ஐ பி முறையில் 10% முதல் 17% வரை கிடைத்துள்ளது.
இதில் இருந்து நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளலாம். சந்தை தொடர்ச்சியாக மேலே ஏறி வரும்போது நாம் ஒரே சமயத்தில் எல்லா பணத்தையும் முதலீடு செய்வது தவறு, அதே சமயம் தொடர்ந்து கீழே இருந்தால் நாம் பெரும்பாலான முதலீட்டை ஒரே சமயத்தில் மேற்கொள்வது சிறந்த யுக்தியாகும். உங்களிடம் பணம் தற்போது இருந்தால், இன்று எஸ் ஐ பி முறையை விட lumpsum முதலீடு சிறந்தது. இதில் இன்னொரு விஷயமும் நமக்கு புலப்படுகிறது, சந்தையின் போக்கை நாம் நன்றாக கவனிக்கவேண்டும். அதை விடுத்து நம்முடைய பழைய முதலீடு முறையை ஒப்பிடக்கூடாது.
இன்று சந்தையில் நிறைய closed ended முதலீடு வருகிறது. இது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை ஒருவர் காத்திருக்கவேண்டிய கட்டாயம். இதனால் தங்களுடைய வாய்ப்புகள் பறி போய்விடுமோ அல்லது அந்த குறிப்பிட்ட முதலீடு சரியாக செயல்படாமல் நஷ்டத்தில் நம்மை தள்ளி விடுமோ என்ற அச்சம் உள்ளது. உங்களுக்கு அச்சம் வருவது தவறல்ல, அதே சமயம் கடந்த 5 வருடம் எப்படி இருந்தது என்ன என்ன வாய்ப்புகள் வருங்காலத்தில் வரக்கூடிய சாத்தியம் உள்ளது என்று சற்றே உள்நோக்கினால் நாம் மிகப்பெரிய வாய்ப்பை கண்டுகொள்ள முடியும்.
இன்று closed ended முதலீடு வருவதற்கான ஒரே காரணம் சந்தை 3 முதல் 5 ஆண்டுகளில் நல்ல ரிடர்ன் தருவதற்கான வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது. பொறுத்திருந்தால் முதலீட்டார் பயன் பெற முடியும். வரும் 5 வருடத்தில் ஒரு பெரிய ஏற்றத்தை கண்டால் முதலீட்டார்கள் உடனே வெளியேறி விடுவார்கள், அதே சமயம் சந்தையில் வாய்ப்பு நீண்ட காலம் இருக்க கூடியதால் இந்த மாதிரி திட்டங்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. ஒரு பணம் 3 முதல் 5 ஆண்டு வரை முதலீட்டில் வைத்திருந்தால் நல்ல, நல்ல பங்காக வாங்கி அது ஏறும்வரை காத்திருந்து அதை நிர்வகிக்கும் நிறுவனம் நல்ல ரிடர்ன்ஸ் தர முடியும். ஒருவர் நீண்ட கால இலக்கில் பணம் வைத்திருந்தால் இந்த வகையான திட்டத்தில் கண்டிப்பாக சேரலாம். இதற்கு ஆங்கிலத்தில் Blessing in Disguise என்று சொல்வார்கள்.
அதே சமயம் ஒருவர் செக்டார் பண்டுகளில் முதலீடு செய்திருந்தார்களேயானால் அவர்களது பணம் இன்னும் 25 முதல் 30% வரை நஷ்டத்தில் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதில் முதலீடு செய்து இவ்வளவு காலம் அந்த பண்டிலேயே இருந்தால், அவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீடு கண்டிப்பாக ஒரு கசப்பான அனுபவத்தையே தந்திருக்கும்.
சந்தை எப்போதும் மேலும் கீழும் சென்று கொண்டே இருக்கும், அதனுடைய விலை தினசரி நிர்வகிக்கப்படுவதாலும், நாம் தினசரி அதனுடைய போக்கை கண்காணிப்பதாலும் நமக்கு டென்ஷன் உருவாகிறது. நீண்ட கால நோக்கில் அதை வைத்திருந்து வருடம் ஒரு முறை சந்தையை ஒட்டி நம்முடைய முதலீடு எவ்வாறு செயல்பட்டிருகிறது என்று பார்த்தால் நாம் தேவையற்ற டென்ஷனை குறைத்துக் கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான வாய்ப்பு, எல்லா நிறுவனங்களிலும் வருமான வரி விலக்குக்கான முதலீடு Sec. 80Cல் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு நிறைய திட்டங்கள் இருந்தாலும், குறைந்த லாக்-இன் உள்ள திட்டம் என்றால் அது கண்டிப்பாக மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் உள்ள ELSS (Equity Linked Savings Scheme) திட்டமே. முன்பு கூறியது போல, கடந்த 3 ஆண்டின் செயல்பாட்டை கருத்தில் கொள்ளாமல் வரும் 3 வருடங்களின் வாய்ப்பை புரிந்து கொண்டால் இது மிகச்சிறந்த முதலீடு.
நாம் முதலீடு செய்யும்போது கவனிக்கக்கூடிய முக்கியமான விஷயம் அந்த முதலீட்டின் செயல்பாடு கடந்த 3 முதல் 5 ஆண்டுகளில் எவ்வாறு இருந்தது மேலும் வரும் காலங்களில் எப்படி இருக்கும். ஆனால் நாம் எப்போதுமே கடந்த ஒரு வருடத்தில் எது நன்றாக இருந்ததோ அதில் பெரும்பாலும் முதலீட்டை மேற்கொள்கிறோம்.
உதாரணமாக தற்பொழுது ஒருவர் 5 முதல் 10 வருடம் வரை காத்திருப்பாரேயானால், அவருக்கு பங்கு சந்தை கடந்த 5 வருடத்தில் பெரிதாக ரிடர்ன் கொடுக்கவில்லை, ஆனால் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் நன்றாக கொடுத்திருக்கிறது எனவே இதே மாதிரி வரும் 5 வருடமும் கிடைக்கும் என எண்ணுவதோ அல்லது பங்கு சந்தை தராததால் இனி வரும் காலங்களில் தராது என நினைப்பதும் பெரிய நஷ்டத்தில் முடியும்.
சாராம்சம்: வாய்ப்பு என்பது எல்லோராலும் உணரக்கூடிய ஒன்றாக என்றுமே இருந்ததில்லை, அப்படி இருந்தால் அது வாய்ப்பாக இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை இருந்தால் அந்த வாய்ப்பினை அனைவரும் பங்கிடும்போது எல்லோருக்கும் குறைந்த அளவே லாபம் கிடைக்கும். இது இயற்கை.
அதே சமயம் நாம் நன்றாக விழித்திருந்தால், நமக்கு நிறைய சிக்னல் வந்து கொண்டே இருக்கும், அதை நாம் புரிந்து கொண்டோமேயானால் நாம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். இன்று சந்தை காளையின் பிடியிலா அல்லது கரடியின் பிடியிலா எனக்கேட்டால், நமக்கு கிடைக்கும் சிக்னல் எல்லாம் காளையின் பிடிதான் என்று உணர்த்துகிறது. வரும் 3 முதல் 5 ஆண்டு வரை ஒருவருடைய முதலீடு காத்திருந்தால், அந்த முதலீட்டில் கண்டிப்பாக நன்றாக பயன் பெறமுடியும் என்பதில் ஐயமில்லை. வாய்ப்பை புரிந்து செல்படுவோம்.
padmanabhan@fortuneplanners.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT