Published : 08 Feb 2014 09:42 AM
Last Updated : 08 Feb 2014 09:42 AM
தங்கத்தின் மீதான வரியைக் குறைக்கும் யோசனை ஏதும் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் உறுதிபடத் தெரிவித்தார்.
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை (சுங்க வரி) குறைக்கும் எண்ணம் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் வெள்ளிக் கிழமை எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியதாவது:
2013-ம் ஆண்டில் அரசு தங்கத்தின் மீது சுங்க வரியை மூன்று முறை உயர்த்தியது. இப்போது 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படுகிறது. நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் (சிஏடி) குறைக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையும் என்ற நிலையை தடுப்பதற்கும் இத்தகைய நடவடிக்கை அவசியமாயிருந்தது. இதனால் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடியும் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 5,000 கோடி டாலருக்குக் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2012-13-ம் நிதி ஆண்டில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவாக 8,820 கோடி டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. இதன் விளைவாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை 5,000 கோடி டாலருக்குள் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் நாட்டில் தங்கம் இறக்குமதி 162 டன்னாக இருந்தது. சுங்க வரி அதிகரிக்கப்பட்டதன் விளைவாக கடந்த நவம்பரில் 19.3 டன்னாகக் குறைந்தது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைப்பது குறித்து மார்ச் மாதத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணையமைச்சர் சீலம், வரிக்குறைப்பு இல்லை என்பதை எழுத்துமூலமாக மக்களவையில் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் தங்கம் இறக்குமதி செய்ததன் மூலம் சுங்க வரியாக அரசுக்கு ரூ. 7,599 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 2012-13-ம் நிதி ஆண்டு முழுமைக்கும் தங்க இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் ரூ. 10,463 கோடியாகும்.
தங்கத்தின் மீது சுங்க வரி அதிகரிப்பதால் கடத்தல் தங்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நிதித்துறை அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர். நாட்டின் இறக்குமதி கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தபோதிலும் மாதத்துக்கு ஒரு டன் முதல் 3 டன் அளவிலான தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் தங்கம், வெள்ளி இறக்குமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 2,730 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இது 3,920 கோடி டாலராக இருந்தது.
ஏடிஎம்-மில் கட்டணமில்லா பரிவர்த்தனை
வங்கிகளின் தானியங்கி பணப்பட்டுவாடா (ஏடிஎம்) மையத்தில் வாடிக்கையாளர்கள் கையாளும் பரிவர்த்தனையில் எத்தனை முறை இலவசமாக அனுமதிக்கலாம் என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இது குறித்து ரிசர்வ் வங்கி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துமூலமாக அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் மேற்கொள்ளும் பரிவர்த்தனை எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கம் ரிசர்வ் வங்கிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி இன்னமும் திட்டவட்டமான முடிவை எடுக்கவில்லை என்றார்.
வங்கிகளின் வாராக் கடன் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாராக் கடனை வசூலிக்க கடன் மீட்பு அதிகாரிகளை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ஏடிஎம்-களில் உள்ள பாதுகாப்பு வசதி குறித்து ஆய்வு செய்யுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT