Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

புதிய வங்கி லைசென்ஸ்: செபி ஆய்வு

தனியார் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது தொடர்பாக அளித்திருந்த விண்ணப்பங்களை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஆய்வு செய்து வருகிறது.

வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் குறித்த விவரங்களை ஆராயுமாறு செபி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

அதனடிப்படையில் செபி ஆய்வு மேற்கொண்டுள்ளது.

வங்கி தொடங்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள 26 தொழில் நிறுவனங்களின் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பாக செபி ஆய்வு செய்கிறது.

பங்குச் சந்தை பரிவர்த்தனையில் செபி வகுத்தளித்த விதிமுறைகளை இந்நிறுவனங்கள் மீறியுள்ளனவா என்பது குறித்தும் ஆராயப்ப டுகிறது. இந்தப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக செபி-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏறக்குறைய பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தனியார் வங்கி தொடங்க ஆர்பிஐ அனுமதி அளிக்க உள்ளது. சுமார் 26 தொழில் நிறுவனங்கள் வங்கி தொடங்க ஆர்வம் தெரிவித்துள்ளன. இவற்றின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதிக்கட்ட தேர்வு நிலையில் உள்ளன.

இதன் ஒரு பகுதியாக நிறுவனங்கள் தங்களது மேம்பாட்டாளர், பங்கு விவரம், வங்கி முதலீடு செய்வது குறித்த விவரம், வங்கி செயல்படுத்தப்பட உள்ள விதம் உள்ளிட்ட விவரங்களை ஆர்பிஐ கோரியுள்ளது.

செபி மட்டுமின்றி காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (ஐஆர்டிஏ) இந்த நிறுவனங்கள் குறித்து விவரமான அறிக்கையை கோரியுள்ளது ஆர்பிஐ.

இதேபோல ஓய்வுக்கால நிதியை நிர்வகிக்கும் ஆணையத்திடமும் (பிஎப்ஆர்டிஏ) விவரம் கோரியுள்ளது.

இவை தவிர, சில குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாரம், எந்த அடிப்படையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்ற விவரத்தைக் கோரியுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் சிலவும் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன. இவை பற்றிய விவரத்தை வெளிநாட்டு பங்குச் சந்தையிடம் ஆர்பிஐ கோரியுள்ளது.

உள்நாட்டு பங்குச் சந்தை மற்றும் வெளிநாட்டு பங்குச் சந்தையிடமிருந்து பெறப்படும் தகவலின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்குவதற்கான லைசென்ஸ் அளிப்பதை ஆர்பிஐ தீர்மானிக்கும்.

தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவது தொடர்பாக அளித்துள்ள விண்ணப்பங்களை ஆராய ஆர்பிஐ-யின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஆர்பிஐ-யின் முன்னாள் துணை கவர்னர் உஷா தோரட், செபி முன்னாள் தலைவர் சி.பி. பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் முதலாவது கூட்டம் நவம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.

நிறுவனங்களுக்கு வங்கி தொடங்குவதற்கான லைசென்ஸ் வழங்குவது தொடர்பான இறுதி முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு ஆர்பிஐ வசம் உள்ளது. அனேகமாக ஜனவரி மாதம் இது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா குழுமம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், பிர்லா குழுமம், லார்சன் அண்ட் டியூப்ரோ, பஜாஜ், எஸ்ஆர்இஐ, ரெலிகரே, இண்டியா புல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இது தவிர இந்திய தபால்துறை, ஐஎப்சிஐ, எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், ஜேஎம் பைனான்சியல், முத்தூட் பைனான்ஸ், எடெல்வைஸ், ஐடிஎப்சி, இந்தியா இன்ஃபோ லைன்,  ராம் கேபிடல் உள்ளிட்ட நிறுவனங்களும் வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி 2 கட்டங்களாக தனியார் வங்கி தொடங்க அனுமதி அளித்துள்ளது. கோடக் மஹிந்திரா, யெஸ் வங்கி ஆகியன 2003-ல் தொடங்கப்பட்ட தனியார் வங்கிகளாகும். இதற்குப் பிறகு அனுமதி அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x