Published : 07 Feb 2014 09:59 AM
Last Updated : 07 Feb 2014 09:59 AM

ரூ. 5 ஆயிரம் கோடி முதலீடு: மஹிந்திரா திட்டம்

வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா நிறுவனம் ரூ. 5 ஆயிரம் கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

வாகன உற்பத்திக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, புதிய மாடல்களை உருவாக்குவது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது உள்ளிட்டவற்றில் இந்த முதலீடு செய்யப்படும் என்று நிறுவனத்தின் தலைமை அதிகாரி பிரவீண் ஷா தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டில் 8 முதல் 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம், இதில் ஏற்கெனவே உள்ள மாடல்கள் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்துவதும் அடங்கும் என்றார். மும்பையைத் தலைமையிடமமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்துக்கு ஜஹீராபாத் மற்றும் ஹரித்வாரில் தொழிற்சாலைகள் உள்ளன. இது தவிர இகத்புரி, நாசிக், சக்கன், காண்டிவிலி ஆகிய பகுதிகளிலும் ஆலைகள் உள்ளன.

ரேவா நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ள இந்நிறுவனம், நடைபெறும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹாலோ எனும் பேட்டரி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு கதவுகளைக் கொண்ட இந்த கார் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. 0 விநாடிகளில் 100 கி.மீ. வேகம் பிடிக்கக் கூடியது. இதன் அதிகபட்ச வேகம் 160 கி.மீ ஆகும். ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் செல்ல முடியும். ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். 15 நிமிஷம் சார்ஜ் செய்தால் 25 கி.மீ. தூரம் பயணிக்க முடியும்.

மோட்டார் சைக்கிள்

மஹிந்திரா நிறுவனம் 300 சிசி திறன் கொண்ட மோஜோ எனும் புதிய ரக பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இது விற்பனைக்கு வரவுள்ளது. இது தவிர டிஸ்க் பிரேக் கொண்ட சென்டுரோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

டொயோடா

இந்நிறுவனம் நியூ எடியோஸ் கிராஸ் எனும் புதிய மாடல் கார்களை சந்தைப்படுத்தியுள்ளது. இளைஞர் களைக் கவரும்வகையில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மே மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. அப்போது இதன் விலை தீர்மானிக்கப்படும். இது 8 கண்கவர் வண்ணங்களில் வெளி வரவுள்ளது.

வோல்வோ

ஸ்வீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனம் இந்தியச் சந்தையில் குறைந்த விலையிலான பஸ்களை தனது கூட்டாளியான ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து அளிக்க உள்ளது. ஐஷர் நிறுவனத்தின் பிதாம்பூர் ஆலையில் யூரோ-6 விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட என்ஜின் தயாரிக்கப்பட்டு அது வோல்வோ நிறுவனத்துக்கு அளிக்கப்படுகிறது.

மாருதி செலெரியோ

மாருதி சுஸுகி நிறுவனம் ஆட்டோ கண்காட்சியில் புதிய ரகக் காரான செலெரியோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 3.9 லட்சம் முதல் ரூ. 4.96 லட்சமாகும். ஹூன்டாய் நிறுவனத்தின் கிராண்டி 10, ஹோண்டாவின் பிரையோ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக செலெரியோ அமையும். ஹூன்டாய் கிராண்ட் விலை ரூ. 6.04 லட்சமாகும். பிரையோ விலை ரூ. 6.19 லட்சமாகும். செலெரியோ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.1 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. 7 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த கார் புளூ டூத் கனெக்டிவிடி கொண்டது.

ஸ்கானியா

ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் மரபு சாரா எரிசக்தியான பயோ காஸ் மற்றும் எத்தனாலில் ஓடக்கூடிய பஸ்களை கண்காட்சியில் வைத்துள்ளது. ஸ்டாக்ஹோமில் எத்தனாலில் ஓடக்கூடிய பஸ்கள் பயன்படுத்தப்படுவதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் கிறிஸ்டர் துலின் தெரிவித்தார்.

தாழ்தள பேருந்து

உதிரி பாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜேபிஎம் குழுமம் தாழ்தள பேருந்துகளை இக்கண்காட்சியில் வைத்துள்ளது. பஸ் தயாரிப்புக்கு இந்நிறுவனம் ரூ. 500 கோடியை முதலீடு செய்துள்ளது. ஹரியாணா மாநிலம் பரீதாபாதில் இந்த பஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 2,000 பஸ்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் ஆர்யா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x