Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM
உணவு பதப்படுத்தும் தொழிலில் உலக அளவில் முக்கிய பங்களிப்பை, இந்தியா அளிக்க வேண்டுமானால், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுவது அவசியம் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.
கோவையில், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் உணவுப் பதப்படுத்தும் தொழில் குறித்த கருத்தரங்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடங்கி வைத்து ஆளுநர் பேசியது:
நமது நாடு உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. அதிகமான இயற்கை வளங்களும், அதற்கு உகந்த தட்ப வெட்ப சூழ்நிலைகளையும் உள்ளடக்கியுள்ளது. மொத்தம் 159.7 மில்லியன் ஹெக்டேர் பயிரிடக்கூடிய நிலங்களையும், 82.6 மில்லியன் ஹெக்டேர் பாசன நிலங்களையும் கொண்டுள்ளது. தற்போது, இத்துறையில், உலக அளவில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்கும் இடமாக இந்தியா விளங்கி வருகிறது.
பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி, உயிர் தொழில்நுட்பப் புரட்சி போன்றவற்றை, நமது நாடு கண்டுள்ளது. தற்போதைய நிலைப்படி, உணவு பதப்படுத்தும் தொழில் புரட்சியைக் கொண்டு வருவது அவசியமாக உள்ளது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013-ஆம் ஆண்டு ஜூலை வரை, மொத்தம் 1,970 மில்லியன் டாலர் வெளிநாட்டு முதலீட்டை, உணவுப் பதப்படுத்தும் தொழிலில் நமது நாடு ஈர்த்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், இத்துறையில் உலக தரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. நமது உள்நாட்டு உற்பத்தியில் மொத்தம் 21 சதவீத இடத்தை உணவு மற்றும் உணவு தயாரிப்பு பொருள்கள் பெற்றுள்ளன. நாட்டு மக்கள் தங்களது வருமானத்தில் 31 சதவீதத்தை, உணவுக்காக செலவிடுகின்றனர். வரும் 2015-ஆம் ஆண்டில் இது 40 சதவீதமாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பால், தானியங்கள் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தேயிலை உற்பத்தியில் உலக அளவில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இருந்த போதும், உலக அளவில், உணவுப் பொருள்கள் வர்த்தகத்தில், நமது நாடு 2 சதவீதத்திற்கும் குறைவாக பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்த பங்களிப்பை உயர்த்துவதற்காக, உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தேசிய உணவுப் பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதேபோல், மாநில அரசும், இத்துறையில், புதிய தொழில்நுட்பம், பொருள் விரயத்தை குறைப்பது, உணவுப் பதப்படுத்தும் முறைகளை மேம்படுத்துவது, மூலப்பொருள்களை, தொழில்கூடங்களுக்கு எடுத்துச் செல்லும் தொலைவைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது சிறந்த செயல்பாடுகளாகும். உணவு பதப்படுத்தும் தொழிலில் உலக அளவில் முக்கிய பங்களிப்பை அளிக்க வேண்டுமானால், புதிய தொழில்நுட்பங்கள் புகுத்துவதும், உணவுத் தரக்கட்டுப்பாடு முறைகளைப் புகுத்துவதும் அவசியமாகும் என்றார்.
கருத்தரங்கில், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் தென்மண்டலக் குழுத் தலைவர் ரவீந்திர சன்னாரெட்டி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT