Published : 08 Mar 2014 10:35 AM
Last Updated : 08 Mar 2014 10:35 AM
இந்தியப் பொருளாதாரம் தற்போது ஸ்திரமான நிலையில் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பொருளாதாரம் இருந்த நிலைமையைக் காட்டிலும் இப்போது ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு வலுவடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு முதலீடுகளும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையை எட்டியிருப் பதால்தான் அன்னிய நேரடி முதலீடுகள் (எப்டிஐ) மற்றும் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் 18 மாதங்களுக்கு முன் அதாவது 2012 ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். அப்போது 2013-14-ம் நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல நடப்புக் கணக்குப் பற்றாக் குறையை (சிஏடி) குறைக்கவும் முடிவு செய்யப் பட்டது. இதன்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 4,000 கோடி டாலராகக் குறைந் துள்ளது என்று சிதம்பரம் சுட்டிக் காட்டினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத் தவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பை உயர்த்தவும் ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் உரிய பலனை அளித்துள்ளன. பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் ரிசர்வ் வங்கியும், அரசும் எடுத்த நடவடிக் கைகள் மிகவும் பாராட்டுக்குரியது. இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நிறுவனங்கள் புதிதாக வங்கிகள் தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து பதிலளித்த ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசி தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தால் சில வாரங்களில் லைசென்ஸ் வழங்கப்படும் என்றார். லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில் அனைத்தும் சரிவர நடந்தேறும் பட்சத்தில் சில வாரங்களில் லைசென்ஸ் வழங்கப்படும் என்று தான் உணர்வதாகக் குறிப்பிட்டார். லைசென்ஸ் வழங்குவதில் தேர்தல் நடத்தை விதி மீறல் ஏதும் இல்லை என்பதை தெளிவுபடுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பொதுவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு எந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடக் கூடாது. அவ்விதம் வெளியிடுவதாக இருந்தால் முன்னதாக தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். திட்டத்தின் தன்மை மற்றும் அதன் அவசியத்தைப் பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்கும்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து பேசிய அமைச்சர் சிதம்பரம், விலைவாசியைக் கட்டுப்படுத் துவது மற்றும் வளர்ச்சிக்கு வித்திடுவது பிரதான பணிகளாக உள்ளன. இதைத்தான் மக்களும் விரும்புகின்றனர். இந்த இரண்டு விஷயங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசுடன் ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்பட்டதால்தான் இலக்கை எட்ட முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தங்கத்தின் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அளவை பரிசீலனை செய்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார். தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவதற்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக எவ்வித பரிந்துரையையும் ரிசர்வ் வங்கிக்கு தாம் அளிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆராய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டது. அந்த அறிக்கை தற்போது ஆர்பிஐ வசம் உள்ளது. அந்த அறிக்கையை தான் பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட சிதம்பரம், இந்த விஷயத்தில் ஆர்பிஐ உரிய முடிவுகளை எடுக்கும் என்றார்.
லைசென்ஸ் வழங்குவது தொடர்பான விஷயங்களை ஆர்பிஐ கவர்னர் என்னிடம் பகிர்ந்து கொள்வாரேயானால் அதை தான் மகிழ்ச்சியுடன் கேட்ப தற்குத் தயாராக இருப்பதாக சிதம்பரம் குறிப்பிட்டார். அதற்காக இது குறித்து அவர் என்னிடம் பேச வேண்டும் என்று அர்த்தமல்ல என்றார்.
ஆர்பிஐ இயக்குநர் குழு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்றம் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகை களை ஆர்பிஐ கண்டறிந்து அந்த இலக்கை எட்டியது என்றார்.
இதுதான் இறையாண்மை யாகும். நாடாளுமன்றம் இலக்கை நிர்ணயித்த இலக்கை எட்டும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது என்றார். வளர்ச்சியை எட்டுவதற்கு பல்வேறு வகையிலான ஒருங்கிணைப்பும் ஒத்திசைவும் மிக அவசியம் என்று தான் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை அதிகரிப்பதற்கு அரசு நிதி அளிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, வங்கிகள் தங்களுடைய முதலீட்டு அளவை அதிகரித்துக் கொள்ள புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
வங்கிப் பங்குகளை ஊழியர்களுக்கு அளிப்பது, குறைந்த பங்குகளை உடைய பங்குதாரர்களுக்கு உரிமப் பங்கு அளிப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார். வாக்குரிமை இல்லாதவர்களின் பங்குகளை என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், புதிய வழிகள் மூலம் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும் திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.
இந்த விஷயத்தில் அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாக ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.
வங்கிகளுக்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளது. அதற்கு அவர்கள் உரிய வருவாயை அரசுக்கு அளிக்கின்றனர். மேலும் நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் ஆராயப்படுகின்றன. நிதி அமைச்சர் கூறிய வழிகளும் ஆராயப்படுவதாக ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT