Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM
கேரள மாநிலத்தில் அமையவுள்ள விழிஞ்சியம் துறைமுகத்துக்கு சர்வதேச டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
விழிஞ்சியம் சர்வதேச துறைமுக லிமிடெட் (விஐஎஸ்எல்) என்ற பெயரிலான இத்திட்டப் பணிக்கு சமீபத்தில் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்புதல் அளித்தது. எந்த ஒரு திட்டப்பணியும் மத்திய அமைச்சகம் அனுமதி அளித்த மறு நாளே டெண்டர் கோரப்பட்டதில்லை.
இதைத் தொடர்ந்து சிறப்பு தேவை திட்ட அடிப்படையில் இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சர்வதேச டெண்டர் அழைப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தை மாநில அரசு பல்வேறு இடையூறுகளுக்கிடையே முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
இத்துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இப்பகுதியில் நீரைப் பிளந்து மீன் பிடி மையம் அமைப்பது, துறைமுகம் அமைப்பது ஆகிய பணிகள் அடங்கும். இதற்காக சர்வதேச டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இந்த டெண்டர்களை மதிப்பீடு செய்ய நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டப் பணிகள் ரூ. 1,600 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ரூ. 800 கோடி கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும். எஞ்சிய ரூ. 800 கோடி தொகை நிறு
வன முதலீடுகள் மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவளம் கடற்கரையில் அமையவுள்ள இந்தத் திட்டப் பணி 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது.
இந்தத் துறைமுக பணிகள் நிறைவேற்றப்பட்டால், கேரள மாநிலம் வளம் பெறுவதோடு மிகப் பெரிய கன்டெய்னர் கப்பல்களை, அதாவது 18 ஆயிரம் டிஇயு எஸ் (twenty-foot equivalent units) திறன் கொண்ட கப்பல்களை நிறுத்த முடியும்.
துறைமுகம் அமைய உள்ள வனப்பகுதி பணிகள் 5 ஆண்டுகளில் நிறைவடையும். தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டப் பணிகளை நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கட்டுதல், நிர்வகித்தல், ஒப்படைத்தல் (பிஓடி) அடிப்படையில் இந்தப் பணி நிறைவேற்றப்பட உள்ளதாக கேரள மாநில துறைமுக அமைச்சர் கே. பாபு தெரிவித்தார்.
விழிஞ்சியம் துறைமுகம் இயற்கையாக 24 மீட்டர் ஆழம் கொண்ட துறைமுகமாகும். இது உலகிலேயே மிக ஆழமான துறைமுகமாகும். இதனால் மணல் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்தத் துறைமுகம் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும்போது ஆண்டுக்கு 41 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT