Published : 25 Sep 2013 11:16 AM
Last Updated : 25 Sep 2013 11:16 AM

சிமென்ட் விலை உயர்ந்தாலும் பங்கு விலை உயரவில்லை

மும்பை சிமென்ட் நிறுவனங்கள் சமீபத்தில் விலையை உயர்த்தியபோதிலும் நிறுவனப் பங்குகள் உயரவில்லை. அல்ட்ரா டெக் சிமென்ட், இந்தியா சிமென்ட், ஏசிசி, அம்புஜா சிமென்ட், மெட்ராஸ் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சமீபத்தில் சிமென்டின் விலையை உயர்த்தின. சிமென்டின் விலை உயர்ந்ததால், இந்நிறுவனப் பங்குகள் உயரும் என்ற எதிர்பார்ப்பு தகர்ந்துபோனது. சிமென்ட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தின. இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் விலைகள் உயர்த்தப்பட்டன. சிமென்ட் தேவை குறைந்துபோனதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிர்வாக செலவுகளை ஈடுகட்ட இதைத் தவிர வேறு வழியில்லாமல் சிமென்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்தும் முடிவை எடுத்தன.

ரயில் சரக்குக் கட்டணம் 30 சதவீதம் உயர்த்தப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகும். இதேபோல மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றமும் சிமென்ட் விலை உயர்வைத் தவிர்க்க முடியாததாக்கிவிட்டது. இதனால் 50 கிலோ மூட்டை விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயர்த்தப்பட்டன. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவு காரணமாக நிலக்கரி இறக்குமதி விலை அதிகரித்தது. உள்நாட்டில் கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி விலையை உயர்த்தியதால் சிமென்ட் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

மேலும் சிமென்ட் தேவை குறைவாக இருந்ததால் நிறுவனங்களின் மொத்த உற்பத்தித் திறனில் 70 முதல் 75 சதவீதம் வரையே பயன்படுத்தப்பட்டன. இதனால் நிர்வாகச் செலவு காரணமாக லாபத்தின் அளவு 5 முதல் 7 சதவீதமாகக் குறைந்தது.

கடந்த வாரம் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை அறிவிப்பின்போது கால் சதவீதம் (0.25) உயர்த்தியது. இதனால் வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவானது. இதனால் புதிய வீடு வாங்குவோர், கட்டுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. மேலும் நாட்டி்ல நிலவும் பொருளாதார தேக்க நிலையும் சிமென்ட் தேவையைக் குறைத்தது. இதனால் நிறுவனங்கள் தங்களது விரிவாக்க நடவடிக்கைகளைத் தள்ளிப்போட்டுள்ளன. அத்துடன் புதிய முதலீடுகளையும் தவிர்த்துள்ளன.

இருப்பினும் நடப்பு நிதி ஆண்டின் பிற்பாதியில் சிமென்ட் விற்பனை அதிகரி்க்கும் என்று ரெலிகர் நிறுவன ஆய்வாளர் மிஹிர் ஜவேரி தெரிவித்துள்ளார். இருந்தாலும், பெருமளவிலான முதலீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதுபோல தெரியவில்லை. மேலும், கடனுக்கான அதிக வட்டி காரணமாக தனியார் முதலீடுகளும் குறையும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் சிமென்ட் தேவை குறைவாகவே உள்ளது. இருப்பினும் தென் பிராந்தியத்தில் உள்ள சிமென்ட் ஆலைகள் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x