Published : 08 Oct 2013 04:14 PM
Last Updated : 08 Oct 2013 04:14 PM
உணவுப் பாதுகாப்பு சட்டம் காரணமாக இந்திய அரசின் உணவு மானிய செலவு வரம்பை மீறக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் பாலியில் நடைபெற உள்ள அடுத்த உலக வர்த்தக நிறுவன (டபிள்யூ.டி.ஓ.) பேச்சில் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது என்றார் அதன் தலைவர் ராபர்டோ அசிவெடோ.
உலக வர்த்தக நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இவர் புது டெல்லிக்கு திங்கள்கிழமை வந்தார்.
மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் இதுகுறித்து பேச்சு நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவில் அனைவருக்கும் உணவு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக உணவு பாதுகாப்பு சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் ஒட்டுமொத்த மானியச் செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தப்படி எந்த நாட்டின் மானியச் செலவும் அதன் மொத்த பட்ஜெட் மதிப்பில் 10 சதவீதத்தைத் தாண்டக் கூடாது. உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டால் இது சாத்தியமில்லை.
அத்துடன் சர்வதேச சந்தையில் அரிசி, கோதுமை போன்றவை கிடைப்பது குறையக்கூடும். அதன் விலைகளிலும் மாறுதல் ஏற்படும்.
இதனால் உலக வர்த்தகத்தில் சமச்சீரற்ற நிலை ஏற்படும் என்று அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அஞ்சுகின்றன. எனவே இந்தியா இந்தத் திட்டத்தைத் தொடர்வதை அவை விரும்பவில்லை.
சந்தையில் அளிப்புக்கும், தேவைக்கும் இடையிலான இயற்கையான போட்டி அனுமதிக்கப்பட வேண்டும்.
தடையற்ற உலக வர்த்தகம் நடைபெற நாடுகள் தங்களுடைய சட்டத்திலோ, பட்ஜெட்டிலோ எந்தவித தடையையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதே உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படை அம்சம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், தன்நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க முடியாது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
பாலி மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இந்த விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவரிடம் ஆனந்த் சர்மா குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT