Published : 19 Nov 2013 12:00 AM
Last Updated : 19 Nov 2013 12:00 AM
நாட்டின் வங்கித் துறை செயல்பாடு மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளதாக சர்வதேச தரச் சான்று நிறுவனம் மூடி’ஸ் தெரிவித்துள்ளது.
வங்கிகளின் சொத்து மதிப்பு தரம் மற்றும் வங்கிகளின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று அது சுட்டிக் காட்டியுள்ளது. வங்கிகளின் மோசமான செயல்பாடு அதன் பொருளாதார வளர்ச்சியில் எதிரொலிக்கும். இது வங்கிகளின் சொத்து மதிப்பை மேலும் சரிவடையச் செய்யும் என்று மூடி’ஸ் குறிப்பிட்டுள்ளது.
வங்கிகள் ஈட்டும் லாபமும் குறையும். ஏனெனில் கடன் வழங்கியதால் ஏற்படும் இழப்பீடுகளைச் சமாளிக்க ஒதுக்கும் தொகை அதிகரிக்கும்போது வங்கியின் லாபம் குறையும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 4.5 சதவீத அளவுக்கே இருக்கும் என சமீபத்தில் இந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இதேபோல இந்தியாவில் உள்ள வங்கிகளின் செயல்பாடு கவலையளிப்பதாக உள்ளது என்று 2011-ம் ஆண்டு நவம்பரிலிருந்தே சுட்டிக்காட்டி வருகிறது.
வங்கித் துறையின் செயல்பாடு கவலையளிக்கும் அளவுக்கு சரிந்ததற்கு பொதுத்துறை வங்கிகளே பிரதான காரணமாகும். இவற்றின் வாராக் கடன் அளவு அதிகரித்தது மற்றும் கடன் வழங்கும் முறையை மாற்றியமைத்ததும் முக்கியக் காரணமாகும். கட்டமைப்பு வசதியில் உள்ள குறைபாடுகள் புதியது அல்ல. சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை காரணமாக இந்தக் குறைபாடுகள் அதிகமாகத் தெரிகின்றன.
இவையும் சொத்து மதிப்பின் தரத்தை மேலும் சரிவடையச் செய்யும் என்று நிறுவனத்தின் மூத்த அனலிஸ்ட் ஜீன் பாங் குறிப்பிட்டார்.
தனியார் வங்கிகள் குறித்த மூடி’ஸ் கண்ணோட்டம் மாறுபட்ட தன்மையுடையதாக இருந்தது. தனியார் வங்கிகளின கடன் வழங்கு அளவு மிகவும் வலுவானதாகவும், முதலீட்டு அளவு அதிகமாகவும் உள்ளது. பொதுத்துறை வங்கிகள் பெரும்பாலும் அரசு மூலதனத்தை நம்பியே உள்ளன. வங்கிகள் தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
வங்கிகளின் வாராக் கடன் மற்றும் கட்டமமைப்புத் துறைக்கு வழங்கப்பட்ட கடன் அளவு சில குறிப்பிட்ட வங்கிகளில் அதிகமாக உள்ளது. கட்டமைப்புத் துறைக்கு அதிகம் கடன் வழங்கிய வங்கிகளின் வாராக் கடன் அதிகமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT