Last Updated : 17 Nov, 2013 12:28 PM

 

Published : 17 Nov 2013 12:28 PM
Last Updated : 17 Nov 2013 12:28 PM

தோல்வியில் பிறந்த வெற்றி - அருண் அத்தியப்பன் சிறப்புப் பேட்டி

வேலையை விட்டுவிட்டு பிஸினஸ் ஆரம்பிப்பதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். அப்படி ஆரம்பித்த பிஸினஸ் ஒரு கட்டத்தில் தோற்றுப்போய் மீண்டும் வேலைக்குப் போகும் சூழல் வந்த பிறகு திரும்பவும் பிஸினஸ் ஆரம்பிப்பதற்கு, பல மடங்கு துணிச்சல் இருந்தால்தான் அது சாத்தியம். அப்படிப்பட்டவர்தான் டிக்கெட்கூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அருண். சமீபத்தில் டை(tie- the indus entrepreneurs) விருது வாங்க வந்திருந்த அவரிடம் ஒரு நீண்ட பேட்டி.

முதல் பிஸினஸ் எப்படி தோற்றது என்று கேட்பதற்கு முன்பு, அவருடைய ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பதை அவரிடமே கேட்டோம்?

நாமக்கலில் பிறந்தவன் நான். பிறகு கோவையில் இருக்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். படித்தது மெக்கானிக்கலாக இருந்தாலும் சாப்ட்வேர் துறையில் ஆர்வம் இருந்தது. இருந்தாலும் கேம்பஸில் பாஷ் (Bosch) நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில காலம்தான் இருந்தேன். அதன்பிறகு நாமக்கல் வந்து சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.

சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முடிவு செய்தபிறகு ஏன் நாமக்கலில் உங்களது நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்?

நாமக்கலில் ஆரம்பிப்பதற்கு எந்த பெரிய காரணமும் இல்லை. இப்போது இருக்கும் தெளிவு அப்போது இல்லை. மேலும், என்னை நம்பியவர்கள் எல்லாம் நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்ததால் அங்கு ஆரம்பித்தேன். ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, அங்கிருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், லாரி நிறுவனங்கள் உள்ளிட்டவர்களிடம் காலையில் பேசுவேன். மேலும் அவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரியாததால் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காண்பித்து, இவ்வாறு உங்களுக்கு பயன்படும் என்பதை சொல்லி.பிறகு சாயங்காலம் வந்து அவர்களுக்கான மென்பொருளை எழுதுவேன். இது கூடவே கார்மென்ட் பிஸினஸும் செய்துவந்தேன். இதில்தான் பிரச்னை, கார்மென்ட் பிஸினஸ் சரியாக போகவில்லை.இதனால் பத்துலட்ச ரூபாய் அளவுக்கு கடன் ஆகிவிட்டது.

உங்களுடைய சாப்ட்வேர் பிஸினஸை ‘ஸ்கேல் அப்' செய்ய முடியவில்லையா?

சாப்ட்வேர் பிஸினஸ் நன்றாக இருந்தாலும், அதில் ஒரு தவறு செய்துவிட்டேன். டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒரு சாப்ட்வேரை தயாரித்து கொடுத்தபிறகு, வேறு துறை நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரிக்க ஆரம்பித்தேன். இதை செய்யாமல் ஒரு துறைக்கு எழுதி, அதிலிருக்கும் பிரச்னைகளை களைந்து, அடுத்தடுத்த நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அப்போது சிறிய வயது என்பதால், ஒரு வேலையைச் செய்யாமல் வேறு வேறு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டேன்.

அதன் பிறகு என்ன செய்தீர்கள்?

10 லட்ச ரூபாய் கடனாகிவிட்டது. இப்போதே பத்து லட்ச ரூபாய் பெரிய தொகை, இந்த தொகையை 1997-ம் ஆண்டே இழந்திருந்தேன். மேலும் அந்த சமயத்தில் எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் செய்யாமல், சென்னைக்கு வந்துவிட்டேன். என்னுடைய நெருங்கிய உறவினர்கள்தான் அந்த தொகையை எனக்கு கொடுத்து உதவி செய்தார்கள்.

வேலை எளிதாக கிடைத்ததா?

ஒரு வேலை கிடைத்தது, அதாவது ஒரு டெக்னாலஜி நிறுவனம் எனக்கு பயிற்சி கொடுக்கும். அந்தப் பயிற்சியை நான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் சுமார் 7 மாதங்கள் வரை வேலை செய்தேன். ஆனாலும் சம்பளம் சரியாக கிடைக்கவில்லை. இந்த சமயங்களில் என் மனைவி ஊரிலே இருப்பார்கள். சென்னையில் வைத்து சமாளிக்கக் கூட முடியாது. மாலை நேரங்களில் என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே இருந்தேன். இப்போது முன்னணியில் இருக்கும் ஒரு டெக்னாலஜி நிறுவனத்தில் இன்டர்வியூ வரைக்கும் முடித்து ஹெச்.ஆரில் உங்களுக்கு வயதாகி விட்டது. உங்களை விட சிறியவர்கள் இருக்கும் டீமில் உங்களைச் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் இதே பிரச்னை இருந்தது. ஆனால் அப்போதைக்கு அங்கு டெக்னாலாஜி நபர்கள் குறைவாக இருந்ததால் என்னை எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது எந்த மனநிலையில் இருந்தீர்கள்?

வேலை இல்லை, 10 லட்சம் கடன் என்ற நிலைமையில் ஒரு வேலை கிடைத்தது கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. ஹெச்.சி.எல்லில் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டதற்கு இப்போது ரூ.10,000 வாங்குகிறேன், ரூ.12,000 போதும் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு ரூ.15,000 சம்பளமாக கொடுத்தார்கள். ஆனால் உள்ளே போனபிறகுதான் தெரிந்தது, மற்றவர்களின் சம்பள விவரம். இருந்தாலும் என்னுடைய வேலையை பார்த்த பிறகு அடுத்த ஆறு மாதங்களில் ஓரளவு நல்ல சம்பள உயர்வு இருந்தது!

2007-ம் ஆண்டுதான் டிக்கெட்கூஸ் நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்! இடையில் என்ன செய்தீர்கள்?

இடையில் நிறுவனம் மாறினேன். அமெரிக்காவில் மூன்று வருடம் வேலை பார்த்தேன். முக்கியமாக கடனை அடைத்தேன். அங்குதான் என்னுடைய நண்பன் கார்த்திகேயனை சந்தித்தேன். பிறகு இந்தியா வந்து நான், கார்த்தி, இன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்தோம். ஆனால், எங்கள் இருவராலும் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அந்த நிறுவனத்தில் தொடர முடியவில்லை. வெளியே வந்துவிட்டோம்.

இந்த நிறுவனத்துக்கான ஐடியா எப்படி கிடைத்தது?

ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அந்த எண்ணத்தை ஏன் விட வேண்டும் என்று பலவிதமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தோம். ஒரு முக்கியமான பண்டிகை நாளில் கார்த்தி ஈரோட்டில் இருந்து சென்னை வருவதற்கு பஸ் கிடைக்கவில்லை என்றும் கஷ்டப்பட்டு ஒரு பஸ்ஸைப் பிடித்தேன் என்றும் சொல்லிவிட்டார். ஆனால் என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.

டிக்கெட்டில் ஏதோ பிஸினஸ் வாய்ப்பு இருப்பதாகவே எனக்குப்பட்டது. கார்த்தி காலையில் என்னை வந்து பார்ப்பதற்குள் ஊரில் இருக்கும் சில பஸ் ஆப்பரேட்டர்களிடம் பேசி அந்த பிஸினஸ் மாடலை ஓரளவுக்கு உருவாக்கி வைத்திருந்தேன். காலையில் வந்ததும், இன்னும் சில டெக்னிக்கல் நண்பர்களுடன் பேசி இந்த ஐடியாவை ஓ.கே செய்தோம்.

அதெப்படி அனைத்து ஆன்லைன் பஸ்டிக்கெடிங் நிறுவனங்களுக்கும் ஒரே கதை?

ரெட்பஸ் நிறுவனம் எங்களுக்கு ஒரு வருடம் முன்பு ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் இதை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு அப்படி ஒரு நிறுவனம் இருப்பதே தெரியாது. நாங்கள்தான் முதல் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். இந்த ஐடியாவை ஓ.கே செய்துவிட்டு கார்த்தி ஊருக்கு போவதற்காக கோயம்பேடு செல்லும் போதுதான் இந்தியாபஸ்டிக்கெட்.காம் என்ற ஒரு நிறுவனத்தை கார்த்தி பார்த்திருக்கிறார். இருந்தாலும் இந்த பிஸினஸுக்கு வாய்ப்பு இருப்பதாகவேத் தெரிந்தது. அதனால் தைரியமாக ஆரம்பித்தோம். கார்த்தியின் நண்பர் வாசுவையும் உடனடியாக இங்கு வரவழைத்து எங்களுடன் சேர்த்துக்கொண்டோம்.

அதென்ன டிக்கெட் கூஸ்? கூஸ் என்றால் வாத்து இனம்தானே? நம்மவர்கள் வாத்துக்கு கொடுக்கும் மரியாதை வேறுதானே?

கூஸ் இது வேறு இனம். இந்த பறவை அதிக தூரம் பறக்க கூடியது. டிக்கெட் புக் செய்கிறவர்களும் அதிக தூரம் பயணம் செய்பவர்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்தோம். இன்னும் சில பெயர்கள் இருந்தது. ஒரு மீன் வகை அதிக தூரம் பயணம் செய்யும். அதை வைக்கலாமா என்றும் கூட யோசித்தோம். அனைத்து பெயர்களையும் எழுதி குலுக்கி என் பெண்ணை எடுக்கச் சொன்னேன். அவள் எடுத்தது கூஸ். ஆனால் நீண்ட நாளைக்கு பிறகுதான் மக்கள் எங்களை இப்படிதான் நினைக்கிறார்கள் என்று புரிந்தது?

முதல் டிக்கெட் விற்பனை செய்ய உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியது?

நிறுவனத்தை ஆரம்பித்தவுடன் கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்களை கொடுத்தோம். 10 நாட்களில் முதல் டிக்கெட் விற்பனை செய்தோம். ஆனால் அடுத்த டிக்கெட் விற்பதற்கும் 10 நாட்கள் ஆகியது. நாங்கள் ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒரு கோட்டாவை வாங்கி வைத்திருந்தோம். அது வேலைக்கு ஆகவில்லை. சமயங்களில் அது கடைசி சீட்டாக இருந்தது, நாங்கள் வாங்கி வைத்திருக்கும் கோட்டாவை விட வாடிக்கையாளர்களுக்கு அதிக டிக்கெட் தேவைப்பட்டது, உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்பட்டது.

இந்த பிரச்னைகளைக் களைய பஸ் ஆப்பரேட்டர்களுக்கு இலவச சாப்ட்வேர் வழங்குவதன் மூலம், அனைத்து டிக்கெட்களையும் ஆன்லைன் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அதிலும் சிக்கல். இலவசமாக கொடுத்ததும் 4 ஆப்பரேட்டர்களை மட்டும் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது.

அவர்களின் பயம், இலவசமாக கொடுக்கும் போது எங்களிடம் எதுவும் கேட்க முடியாது. சாப்ட்வேர் வைத்து பிஸினஸ் செய்து, பிறகு எதாவது பிரச்னை வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அந்த சாப்ட்வேருக்கு விலை வைத்தோம். 40 ஆப்பரேட்டர்களை எங்களுடன் இணைத்தோம்.

ஆன்லைன் பிஸினஸுக்கு விளம்பரம் முக்கியமே?

ஆமாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், எங்களுடைய யுக்தியை மாற்றினோம். அதுவரைக்கும் வாடிக்கையாளர்கள் மூலமாகதான் பிஸினஸ் நடந்து வந்தது. இன்னும் சில மாதங்களில் மார்க்கெட்டிங்குக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம்.

உங்களுடைய நிறுவனத்துக்கு ஏன் வெளிநாட்டில் பணம் திரட்டினீர்கள்?

இந்தியாவில் திரட்டக் கூடாது என்பது அல்ல. நான் அமெரிக்காவில் சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். கார்த்தி 10 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். அதனால் அங்கிருக்கும் தொடர்புகளை வைத்து வெளி நாட்டில் முதலீட்டை திரட்டினோம்.

வென்ச்சர் கேப்பி ட்டல் முதலீட்டை திரட்டும் போது அவர்கள் வெளியேற ஐ.பி.ஓ. வந்தாக வேண்டுமே?

ஆமாம். அவர்கள் வெளியேற வாய்ப்பு கொடுத்துதானே ஆகவேண்டும். மேலும், ஐ.பி.ஓ. வரும் போது கம்பெனியின் நிதி நிலைமையும் பலமாகும். இன்னும் சில நிறுவனங்களை இணைக்கலாம். மேலும் வளரும் நாடுகளில் இதற்கான மார்க்கெட் இப்போது அதிகரித்து வருகிறது,

break even ஆகிவிட்டீர்களா?

இன்னும் ஆகவில்லை.இன்னும் இரண்டு வருடத்துக்கு break even செய்யும் எண்ணம் இல்லை. ஆனால் அது பிரச்னையே இல்லை. வளர்ச்சியைக் குறைத்தால் break even ஆகலாம். ஆனால் இப்போது வளரும் பாதையில் இருக்கிறோம்.

ஆன்லைன் பிஸினஸ் என்பது கடல், எதாவது diversification செய்யும் எண்ணம் இருக்கிறதா?

diversification நல்லதுதான். ஆனால் பிஸினஸில் வளர்ச்சி முடிந்துவிட்ட போது அதை செய்வதுதான் நல்லது. இப்போதைக்கு இந்தியாவின் சொகுசு பேருந்தின் சந்தை மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் ஆன்லைன் மார்கெட் ரூ. 2,000 கோடிதான், இதில் எங்களின் பங்கு ரூ. 52 கோடி(கடந்த நிதி ஆண்டு) மட்டுமே. இதிலேயே வளர்வதற்கு வாய்ப்பு இருக்கும் போது இப்போதை diversification திட்டம் ஏதும் இல்லை.

மீண்டும் பிஸினஸ் செய்வதற்கான மன உறுதி எங்கிருந்து வந்தது?

பிஸினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எப்போதுமே மனதில் இருந்தது. இடையில் கடனை அடைக்கத்தான் வேலைக்கு போனேனே தவிர, நிரந்தரமாக இருக்க அல்ல. மேலும் நிம்மதியான சூழ்நிலையை விட, சவாலான சூழ்நிலையில்தான் என்னுடைய முழுதிறமையும் என்னால் வெளி ப்படுத்த முடியும். அதற்கு பிஸினஸ்தான் ஒரே வழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x