Published : 20 Feb 2014 12:37 PM
Last Updated : 20 Feb 2014 12:37 PM
ஆந்திரத்தைப் பிரிப்பதால் உருவாகும் இரு மாநிலங்களிலும் பொருளாதார, வர்த்தக செயல்பாடுகளில் எழுச்சி ஏற்படும் என தொழில் துறையினரும் வங்கி அதிகாரிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்வது, புதிய தலைநகர் ஆகிய பிரச்சினைகளில் தாமதத்துக்கு இடம் தராமல் விரைவாக தீர்வு காண்பது நல்லது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
‘இரு பிராந்தியங்களின் வளர்ச் சிக்கும் ஊக்கம் தருவதுதான் ஒரு மாநிலம் பிரிக்கப்படுவதன் நோக்கம். ஆந்திரத்தை பிரித்து இரு மாநிலங்கள் உருவாக்கப் படுவதை நல்ல வாய்ப்பாகவே கருத வேண்டும். பொருளாதார, வங்கி செயல்பாடுகள் எழுச்சி பெறவும் வளர்ச்சி பெறவும் இது கூடுதல் வாய்ப்பாகும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஏ.கிருஷ்ண குமார் தெரிவித்தார்.
மாநிலங்கள் பிரிப்பு என்ற விஷயம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே பிகார், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்கள் உருவாக்கப் பட்டன. அங்கு எமது அலுவலகங்கள் செயல் படுகின்றன. வர்த்தகமும் சிறப்பாக நடைபெறுகிறது.
தெலங்கானா அமைவதை ஆதரித்தும் எதிர்த்தும் ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டம் வங்கி வர்த்தகத்தை பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும் கிருஷ்ணகுமார் தெரிவித் தார். ‘மக்களவையில் ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்பு மசோதா 2014 நிறைவேற்றப்பட்டதன் மூலம் நீண்டகாலமாக கிடப்பில் இருந்த பிரச்சினைக்கு தெளிவு கிடைத்துள்ளது. இருப்பினும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பது உண்மைதான்’ என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு (ஆந்திரப் பிரதேசம்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் பி.அசோக் ரெட்டி கூறிய தாவது:
தெலங்கானா, சீமாந்திரா மாநிங்களுக்கு இடையே தண்ணீர், மின்சாரத்தை பகிர்ந்து கொள்வது, புதிய மாநில அரசுகளின் கொள் கைகள், வரிச் சலுகைகள் தொடர் பான சில விவகாரங்களில் முடிவு காணப்படவில்லை. ஹைதராபாத் நகரம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கப்போகிறது. அதற்குப் பிறகு சீமாந்திராவின் தலைநகரம் எது என்பதில் ஆந்திரம் மற்றும் ராயலசீமா பிராந்திய மக்களிடையே மோதலை ஏற்படுத்தப் போகிறது. இது பற்றி விரைவாக முடிவு எடுக்காவிட்டால் புதிய மாநிலத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.
புதிய மாநிலம் அமைக்கும் போது, கிடைக்கும் இயற்கை வளங்கள், மனித ஆற்றல், திறனுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழிற்சாலைகளை தகுந்த இடங்களில் அமைப்பதுதான் நல்ல பலனை தரும். சமூக கட்டமைப்பை விரைவாக உருவாக்குவது அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிகோலும் என்றார் ரெட்டி.
தெலங்கானா விவகாரம் தொடர்பான சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் தொழிலுக்கான சூழல் மேம்பாடு அடையும் நிலை உருவாகியுள்ளது என்று ஆந்திரப் பிரதேச தொழில், வர்த்தகப் பேரவைகளின் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
புதிதாக அமையும் இரு அரசுகளும் சிறந்த தொழில் கொள்கையை அறிவித்தால் தொழில் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT