Published : 02 Oct 2013 12:37 PM
Last Updated : 02 Oct 2013 12:37 PM
பஞ்சாலை முதலாளிகளின் சங்கத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது.
வேலையாட்கள் கிடைக்காமல் இத்துறை அவதிப்படுவதாகவும் "மனித வள" பிரச்சினகளுக்குத் தீர்வுகள் பற்றிப் பேசினால் உகந்ததாக இருக்கும் என்றனர் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். துறை சார்ந்த நண்பர்களிடம் கருத்துகள் கேட்டேன்.
" மினிமம் வேஜஸ் தான் இங்க முடியும். மார்ஜின் ரொம்ப கம்மி. பஞ்சு விலை முதல் ரூபாய் மதிப்பு வரை எல்லாம் எங்களைப் பாதிக்கும். ஆடையாகத் தயாரித்து விற்றால்தான் நல்ல லாபம். தவிர பெரிய ஊர்களில் ரியல் எஸ்டேட் விலை ஏற்றத்தாலும் ஆட்கள் கிடைக்காததாலும் சின்ன ஊர்களில் ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்க முடிகிறது. இதில் பெரிய கம்பெனி மாதிரியெல்லாம் ஹெச். ஆர் எல்லாம் பெரிசா பண்ண முடியாது!"
சில முதலாளிகளிடம் நிகழ்ச்சிக்கு முன் பேசும் பொழுது சொன்னார்கள்: "முன்பு பெர்சனல் மேனேஜர்கள் சம்பளம், யூனியன் பிரச்சினைன்னு டீல் பண்ணுவாங்க. இப்போ ஹெச். ஆர் மேனேஜர்களுக்கு வேலைக்கு ஆட்கள் கொண்டு வர்றதே பெரிய பொறுப்பு. எல்லாம் வெளி மாநிலத்து ஆளுங்க தான். தொடர்ந்து ஆளுங்க கிடைக்க என்ன வழி? அது பத்தி பேசுங்க!"
நிறைய கேள்விகளுடன் சில யோசனைகளுடன் மேடையேறத் தயாரானேன்.
முதல் அமர்வு நிதித் துறை சார்ந்தது. அமெரிக்கா தும்மினால் இங்கு நம் தொழில்கள் எப்படி பாதிப்படையும் என்பதை நான்கு பேச்சாளர்கள் நன்கு விளக்கினார்கள். இரண்டாம் அமர்வு மனித வளம் பற்றியது.
துறைசாராதவர்களின் யோசனைகள் எவ்வளவு முக்கியம் என்பதற்கு சில கண்டுபிடிப்புகளையும் கண்டு பிடித்தோர்களின் பின் புலங்களையும் சொல்லி உரையை ஆரம்பித்தேன்.
பின் சில கேள்விகள் கேட்டேன்:
உங்கள் ஆலையில் கடந்த 5 ஆண்டுகளில் மனித வளத்துறை முதலீடுகளில் என்னென்ன புதிதாகச் செய்தீர்கள்?
உங்கள் ஆலையில் கடந்த 5 ஆண்டுகளில் உங்கள் பணியாளர்களின் யோசனைகளை ஏற்று என்னென்ன புதிதாகச் செய்தீர்கள்?
உங்கள் ஆலையில் கடந்த 5 ஆண்டுகளில் மற்ற ஆலைகளிடமிருந்தோ மற்ற துறையிலிருந்தோ என்னென்ன செயல்களை பின் பற்றியிருக்கிறீர்கள்?
இதில் எதையும் பெரிதாகச் செய்யவில்லை என்றால் எதையும் எப்பொழுதும் போல செய்து வருகிறீர்கள். அப்பொழுது எப்பொழுதும் வரும் முடிவுகள் தான் வரும் என்றேன்.
ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சனைகளுக்கும் விடைகள் உள்ளேயே உள்ளன. அடித்தட்டு நிலையில்- வேலை நடக்கும் இடத்தில், வேலை செய்யும் ஆட்களிடம்- தான் அதிகம் உண்டு. வேலை செய்யும் இடத்தை ஜப்பானியர்கள் கெம்பா என்பார்கள். எந்த பிரச்சினை என்றாலும் "கெம்பாவிற்கு போ" என்பார்கள். முதலாளிகள் எந்த அளவிற்கு கெம்பாவிற்கு போகிறார்கள் என்பதை பொறுத்துதான் அந்த துறை முன்னேறும் என்பது விதி. அனைத்து ஜப்பானிய கம்பெனிகளும் அலுவலகங்களை விட பணி நடக்கும் இடங்களுக்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். அதுதான் அவர்களை எல்லாத் துறைகளிலும் முன்னிலையில் வைத்தது.
பணி செய்பவருக்கு மரியாதை, அவர் கருத்துகளுக்கு முன்னுரிமை, தொடர் முன்னேற்ற நடவடிக்கைகள், தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் இவை பணி சூழலுக்கு முக்கியம் என்றேன்.
பனியாளர்களுக்குச் செய்வது செலவா அல்லது மூலதனமா என்பதை நிர்வாகம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். செலவு என்றால் குறைக்கவும், வியூக ரீதியான முதலீடு என்றால் கூட்டவும் செய்வது இயல்பு. அனைத்து சம்பள நிர்ணயங்களும் இதைச் சார்ந்தது தான். இதை விளக்கினேன்.
இங்கு தான் விவாதங்கள் துவங்கியது. "ஆட்களே இல்லயே சார் முதலில். என்ன கொடுத்தும் ஆளுங்க கிடையாது" என்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தனர்.
நான் கேட்டேன்: "ஒரு மில் தொழிலாளி தன் மகனை மில் தொழிலாளியாக பார்க்க விரும்புகிறாரா?" "இல்லை" என்றனர். ஒரு விவசாயி தன் மகனையோ மகளையோ விவசாயியாக பார்க்க விரும்பாத சூழலை உருவாக்கி விட்ட மாதிரி தான் இது. எத்தனை மாணவர்களுக்கு ஆசிரியர் ஆக ஆசை? ஒரு தொழில் வளர அது பற்றிய மதிப்பீடுகள் காரணம் என்றேன்.
பணியாளர்களுக்கு ஒரு நிரந்தர உத்தரவாதம் அளிக்காமல், அவர்களிடம் மட்டும் பணிக்கு வரும் உத்தரவாதம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? என்ன புத்திசாலித்தனம்?
"இலவசங்களால் சீரழிகிறார்கள்" என்றார்கள். சபையில் உள்ளவர்கள் யாரும் இலவச டி.வி யோ, ரேஷன் பொருட்களோ வங்கியதில்லையா என்று கேட்டேன். மௌனம் பதிலாக வந் தது. இலவச கார் என்றால் நாம் எல்லாரும் கியூவில் நிற்க மாட்டோமா? எதிராளியை தாழ்வாக நினைத்துக் கொண்டு எப்படி அவருடன் ஒரு நல்லுறவு கொள்ள முடியும்?
ஆட்கள் கிடைக்காத சில்லறைத்துறை, தங்களுக்கு தேவையான நபர்களை தாங்களே திறன் பயிற்சி மூலம் தயார் படுத்திக்கொள்வது போல ஏன் ஆலைகள் செய்யக்கூடாது?
திறன்கள் பல்கலைகழகம், பயிற்சி கூட்டமைப்புகள், செலவு செய்யாமல் ஏற்படுத்தக் கூடிய " தொழிலாளர் யோசனைத் திட்டங்கள்", மாற்றுத்திறானாளிகளுக்கு வேலை வாய்ப்பு, மாணவர்களிடம் ஜவுளித்துறை பற்றிய ப்ராண்டிங் முயற்சிகள் இவை பற்றியெல்லாம் பேசியது பெரும் வரவேற்பைப் பெற்றன.
"அப்பா காலத்தில் இதெல்லாம் சாத்தியப்படவில்லை. இப்போது இதுவெல்லாம் அவசியம்!" என்று சில இளைய முதலாளிகள் ஆர்வமாக உரையாடியது நம்பிக்கையைத் தந்தது.
தன் பணியாளர்களை நிறைவாக வைத்துக்கொள்ள முடியாத தொழில்கள் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பது எல்லாரும் அறிய வேண்டிய உண்மை.
நூறு கோடி ஜனத்தொகை உள்ள நாடு பணியாளர்கள் கிடைக்காமல் அவதிப்படுவது இந்நூற்றாண்டின் கொடிய நகைச்சுவை.
சமூக சிந்தனை கூட வேண்டாம். சுய நலமாகவே யோசித்தால் கூட இது ஆபத்தானது என்று புரியும். உலகின் பாதி இளைஞர் மக்கள் தொகை இங்கிருக்க, இந்த மனித வளத்தை பயன்படுத்தாவிட்டால், இங்கு குற்றங்கள் பெருகும். தீவிரவாதம் வலுப்பெறும். சமூக அமைதி கெடும்.
வேலியிட்ட குடியிருப்பில் வசிக்கலாம். சமூகம் முழுவதும் வேலி போட்டுக்கொண்டு வாழ முடியுமா?
ஒவ்வொரு தொழிலும் ஏதோ ஒரு விதத்தில் அமைப்பு சாரா தொழிலாளிகளையும், சட்டம் தெரியாத, சங்கம் சேராத வறியவர்களையும் நம்பித் தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அடித்தட்டு மக்களை திறன் கொண்ட பணியாளர்களாக மாற்றி அவர்களை கௌரவமாக நடத்துவது அவர்களுக்கு நாம் செய்யும் தொண்டு மட்டுமல்ல. நம் தொழிலை நாம் காப்பாற்றிக்கொள்ளும் புத்திசாலித்தனம்.
உலகப் புகழ் பெற்ற நிர்வாக அறிஞர் சி.கே. பிரகலாத் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் ஒரு பெரிய சந்தை என உலகிற்கு உணர்த்தினார், அவரது " Fortune at the bottom of the pyramid " புத்தகத்தில்.
நம் நாட்டின் மனித வள (போலி) தட்டுபாட்டிற்கும் அங்குதான் விடை உள்ளது!
ஆசிரியர் உளவியல் மற்றும் மனித வள ஆலோசகர்.
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT