Published : 21 Nov 2013 12:22 PM
Last Updated : 21 Nov 2013 12:22 PM

ஜனவரியில் எண்ணெய், எரிவாயு வயல்கள் ஏலம்: மொய்லி

எண்ணெய், எரிவாயு துரப்பண அகழ்வு பணிக்கான ஏலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் எண்ணெய், எரிவாயு வயல்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. உள்நாட்டில் எண்ணெய் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் அதே நேரம் இத்துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 86 எண்ணெய் வயல்கள் ஏலத்துக்கென கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என்று ஹைட்ரோ கார்பன் துறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

புதிய எண்ணெய் அகழ்வு கொள்கை -10-ன்படி ஏலம் ஜனவரியில் நடைபெற உள்ளதாக கேபிஎம்ஜி எரிசக்தி மாநாட்டில் பேசிய வீரப்ப மொய்லி குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு 74 எண்ணெய் வயல்கள் ஏலம் விடப்பட்டன. இதில் போட்டியிட்ட 34 நிறுவனங்களில் 33 நிறுவனங்களுக்கு எண்ணெய் அகழ்வுப் பணிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எண்ணெய் எரிவாயுக் கொள்கையின்படி அகழ்வுப் பணியில் 100 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன. இத்தகைய கொள்கையால் குறிப்பிடத்தகுந்த அளவு முதலீடு வரத் தொடங்கியுள்ளன.

புதிய எண்ணெய் அகழ்வு பணிக்கான ஏல தினம் குறித்த அறிவிப்பு ஜனவரியில் நடைபெற உள்ள பெட்ரோடெக் மாநாட்டில் வெளியாகும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

இப்போது ஏலம் விடப்பட உள்ள 86 எண்ணெய் வயல்களுக்கான அனுமதி முற்றிலும் வழங்கப்படும். 1999-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் எண்ணெய் அகழ்வுப் பணிக்கான ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு நடைபெற்ற 9 சுற்று ஏலத்தில் மொத்தம் 254 எண்ணெய், எரிவாயு அகழ்வுப் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த சில சுற்று ஏலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஏல விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

9-வது சுற்று ஏலத்தில் மொத்தம் 34 எண்ணெய் வயல்கள் ஏலம் விடப்பட்டன. இவற்றுக்கான ஏல நடைமுறை மார்ச் 28, 2011-ல் முடிந்தது. இதில் மொத்தம் 19 எண்ணெய் வயல்கள் மட்டுமே ஏலம் விடப்பட்டன.

8-வது சுற்றில் மொத்தம் 70 வயல்கள் ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் 32 வயல்கள் மட்டுமே ஏலம் போனது. 7-வது சுற்றில் 41 வயல்கள் ஏலம் போனது. 6-வது சுற்றில் 52 வயல்கள் ஏலம் போனது. முதல் 5 சுற்றுகளில் மொத்தம் 107 வயல்கள் ஏலம் விடப்பட்டன.

இந்தியாவில் மொத்தம் 31 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எண்ணெய் வளம் உள்ள பகுதிகள் 26 கண்டறியப்பட்டுள்ளன. இதில் இது 93 சதுர கிலோமீட்டர் பரப்பளவில்தான் எண்ணெய், எரிவாயு அகழ்வு பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 19 இடங்களில்தான் எண்ணெய் அகழ்வுப் பணி நடைபெற்று வருகிறது.

எண்ணெய் எரிவாயு அகழ்வுப் பணிக்கான கொள்கை 1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 9 சுற்றுகள் ஏலம் விடப்பட்டுள்ளன. எண்ணெய் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உள்நாட்டில் சந்தை விலைக்கு கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x