Published : 14 Dec 2013 07:01 PM
Last Updated : 14 Dec 2013 07:01 PM
ஹெக்ஷெர்- ஓஹ்லின் கோட்பாடு (Heckscher-Ohlin Theorem)
ஒப்பீடு சாதக நிலைதான் (Comparative advantage) பன்னாட்டு வர்த்தகத்தின் அடிப்படை என்பதை நேற்று பார்த்தோம். இந்த ஒப்பீடு சாதக நிலை ஏற்படுவதற்கான காரணத்தை ஹெக்ஷெர் ஓஹ்லின் கோட்பாடு விளக்குகிறது. ஒரு நாட்டில் உள்ள உற்பத்தி காரணியின் இருப்பு (factor endowment) அந்நாட்டின் ஒப்பீடு சாதக நிலைக்குக் காரணமாகிறது என்பது இக்கோட்பாட்டின் மையக்கருத்து.
இந்தியாவில் உழைப்பு அதிகமாகவும், ஜப்பானில் தொழில்நுட்ப அறிவு அதிகமாகவும் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அரிசிக்கு உழைப்பு தேவைப்படும், எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். இந்தியாவில் உழைப்பு அதிகமாக இருப்பதால் அதற்கான கூலி குறைவாக இருக்கும்; அதேபோல், ஜப்பானில் தொழில்நுட்ப அறிவு அதிகமாக இருப்பதால் அதனின் விலைக் குறைவாக இருக்கும். எனவே, இந்தியாவில் அதிகமாக இருக்கும் உழைப்பை குறைந்த கூலியில் பயன்படுத்தி அரிசியை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும். இதேபோல், ஜப்பானில் இருக்கும் தொழிநுட்ப அறிவை குறைந்த விலையில் பயன்படுத்தி எலெக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவில் உழைப்பு அதிகமாக இருப்பதால் உழைப்பை பயன்படுத்தும் உற்பத்தியில் அதற்கு ஒப்பீடு சாதக நிலை உண்டு, ஜப்பானில் தொழில் நுட்ப அறிவு அதிகமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்தி உற்பத்தியில் அதற்கு ஒப்பீடு சாதக நிலை உண்டு. இதுவரை நாம் பார்த்த கோட்பாடுகள் எல்லாம் பன்னாட்டு வியாபாரம் நாடுகளின் உற்பத்தி திறனை அடிப்படையாகக்கொண்டது என்று பார்த்தோம். ஆனால் வியாபாரத்தில் பொருட்களின் தேவையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிவோம்; அதையும் சேர்த்தால் இந்த கோட்பாடுகளினால் பன்னாட்டு வியாபாரத்தை முழுமையாக விளக்கமுடியாது.
உற்பத்தித் தொழில் நுட்பம் மாறும்போதும் உற்பத்திக் காரணிகளின் தேவையும் மாறும். இதனால் ஒரு நாட்டில் அதிகமாக உள்ள உற்பத்திக் காரணி சட்டென்று உற்பத்தியில் தேவைப்படாமல் போகும். உதாரணமாக அதிக இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வந்தால் உழைப்பின் தேவை குறைந்து போகும் என்பதை அறிவோம். எனவே பொருட்களின் தேவை, தொழில்நுட்ப மாற்றங்கள் பன்னாட்டு வியாபாரத்தை மாற்றி அமைக்கும் என்பதை நினைவில் கொள்க.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT