Published : 27 Jun 2017 10:14 AM
Last Updated : 27 Jun 2017 10:14 AM
அமெரிக்க தொழில் துறையினர் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொழில்துறையினரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தொழில்துறை தலைவர்கள், நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவில் உள்ள 20 முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, சிஸ்கோவின் தலைவர் ஜான் சேம்பர்ஸ், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸ் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர்களாவர்.
கலந்துரையாடலின்போது மோடி பேசியதாவது: மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொண்ட சீர்திருத்தங்களினால் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருகின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக மோடி சுட்டிக் காட்டினார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் தொழிலதிபர்களுடன் பேசிய பிறகு இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்டிருந்ததாவது: உலகமே தற்போது இந்தியப் பொருளாதாரத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறது. குறிப்பாக உற்பத்தித் துறை, வர்த்தகம், மக்களுடனான தொடர்பு, உள்ளிட்டவையும் கவனிக்கப்படுகின்றன.
இந்தியாவின் வளர்ச்சியானது பரஸ்பரம் பலனளிப்பதாக அமையும். நட்பு நாடான அமெரிக்காவுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். இதை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மோடி குறிப்பிட்டார்.
அமெரிக்கா வலுவடைந்தால் அதனால் பலன் பெறுவது இந்தியாதான் என்று குறிப்பிட்ட அவர், ஜூலை மாதம் முதல் அமலுக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையானது மிகவும் சிக்கலான பணியாகும். ஆனால் அதை எவ்விதம் சிறப்பாக செயல்படுத்துகிறது என்பதை அமெரிக்காவில் உள்ள வணிகவியல் கல்வி மையங்களில் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றார்.
மிகப்பெரிய சீர்திருத்தங்களை அரசு எவ்வளவு எளிமையாக செயல்படுத்துகிறது என்பது இதிலிருந்து புலனாகும் என்று குறிப்பிட்டார். கூட்டத்தில் பங்கேற்ற தொழில்துறை தலைவர்களின் எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை பொறுமையாகக் கேட்டறிந்தார் மோடி.
சுற்றுலாத் துறையில் மிகச் சிறந்த வாய்ப்பு உள்ளதாகவும் 500 ரயில் நிலையங்களில் தனியார் பங்கேற்புடன் ஹோட்டல்கள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்த உள்ளதாகக் குறிப்பிட்ட மோடி, இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொடர்ந்து பாடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
இந்திய அரசு செயல்படுத்தும் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்களை அமெரிக்க தொழில்துறையினர் வெகுவாகப் பாராட்டியதாக செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே குறிப்பிட்டார்.
திறன் மேம்பாடு மற்றும் கல்வி திட்டப் பணிகளில் தாங்கள் ஈடுபட விரும்புவதாக சில நிறுவன தலைவர்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சமூக நலத் திட்டங்களையும் அவர்கள் மோடியிடம் விளக்கினர்.
500 கோடி டாலர் முதலீடு: அமேசான் திட்டம்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்தியாவில் மேலும் 500 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு ஜெஃப் பிஸோஸ் ட்விட்டரில் இதை குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் நிறுவனம் இந்திய செயல்பாடுகளைத் தொடங்கி நான்காவது ஆண்டை சமீபத்தில் நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்துக்கு இந்திய ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கடும் சவாலாக விளங்குகிறது. இந்த போட்டியை சமாளிப்பதற்கு ஏற்ப இந்தியாவில் தனது விரைவான விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. நிறுவனத்துக்கு 13 மாநிலங்களில் 41 பொருள் சேமிப்பு மையங்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT