Last Updated : 30 Jun, 2017 07:46 PM

 

Published : 30 Jun 2017 07:46 PM
Last Updated : 30 Jun 2017 07:46 PM

ஜிஎஸ்டி-யால் ஜிடிபி 1-1.5% வளர்ச்சியடையும் என்பது அபத்தமானது : நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் கருத்து

ஜிஎஸ்டி வரி அறிமுகத்தினால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 1-1.5% வரை வளர்ச்சியடையும் என்று கூறுவது ‘குப்பையான’ வாதம் என்கிறார் நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய்.

முன்பு முன்மொழியப்பட்ட முழுமுற்றான ஜிஎஸ்டி அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இந்த ஜிஎஸ்டி வரி அமைப்பு ‘முழுமை பெறாதது’ என்று கூறினார் பிபேக் தேப்ராய்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வருவாய் செயலர் ஹஷ்முக் ஆதியா, ஆகியோர் ஜிடிபி வளர்ச்சி பற்றி குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியவுடன் பிபேக் தேப்ராய், தான் அவர்கள் கூறுவதற்கு மாறாகக் கூறவில்லை என்றார்.

ஜிஎஸ்டி பாணி வரி அமைப்பு 6 அல்லது 7 நாடுகளில்தான் இருக்கும், ஆனால் 140-160 நாடுகள் என்று கூறப்படுவது மற்றுமொரு ‘குப்பையான’ புள்ளிவிவரமாகும் என்றார்.

இந்தி செய்தி சேனல் ஆஜ் தக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி வரி பற்றி பேசிய தேப்ராய், “1-1.5% ஜிடிபி வளர்ச்சி ஜிஎஸ்டிக்குப் பிறகு இருக்கும் என்ற புள்ளிவிவரங்கள் புழங்கி வருகின்றன, இது சுத்த குப்பைத்தனமானது. முழுமைபெறாத ஒரு ஜிஎஸ்டி வரி திட்டத்தில் இந்த எண்ணிக்கை எப்படி வருகிறது என்பது புரியவில்லை, இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம், குறைவாக இருக்கலாம் ஆனால் இந்தப் புள்ளிவிவரம் சரியானதல்ல.

முழுமுற்றான ஜிஎஸ்டி வரித் திட்டமாக இருந்தால்1-1.5% ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று என்.சி.ஏ.இ.ஆர். மாடல் தெரிவிக்கிறது. ஆனால் இதுதான் முற்றான ஜிஎஸ்டி அல்லவே.

அதிக விலையுள்ள பொருட்களுக்கு வரி அதிகமாகவும், பெரிய அளவில் நுகரும் பொருட்களுக்கு குறைவாகவும் வரி உள்ளது. ஒரு பொருளாதாரவாதியாக நாம் இப்படிச் செய்யக்கூடாது என்று கருதுகிறேன்.

தற்போதைய ஜிஎஸ்டியில் பல்வேறு வரி விகிதங்கள் உள்ளன. கூட்டாட்சி அமைப்பில் இது சிக்கலானதே, மேலும் ஒற்றை ஜிஎஸ்டி வரியே சிறந்தது, பல்வேறு ஜிஎஸ்டி வரிகள் செயற்கையான தடைகளையே ஏற்படுத்தும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x