Published : 04 Nov 2013 07:38 PM
Last Updated : 04 Nov 2013 07:38 PM

நாடு முழுவதும் 5 கிலோ சிலிண்டரை பெட்ரோல் நிலையங்களில் விற்க அனுமதி

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்களை விற்பனை செய்ய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அனுமதி அளித்துள்ளார்.

நாட்டின் ஐந்து பெரு நகரங்களில், சோதனை முயற்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள வழிவகுக்கப்பட்ட திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, பெட்ரோலியத் துறை இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்தத் திட்டம் வெள்ளோட்டமாக அக்டோபர் 5-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள், நிறுவனத்துக்குச் சொந்தமான - நிறுவனத்தால் நடத்தப்படும் (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் கிடைத்து வந்தன. இது நாட்டில் மொத்தமுள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களில் 3 சதவிகிதம் மட்டுமே. இது சந்தை விலைக்கு விற்கப்படும். தற்போது மானிய விலையாக 14.2 கிலோ எடை சிலிண்டர் ரூ.410-க்கு விநியோகிக்கப்படுகிறது. சந்தை விலையானது அதைவிட இரு மடங்குக்கு மேல் அதிகமாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையை அக்டோபர் 5 ஆம் தேதி பெங்களூரில் பெட்ரோலியத் துறை அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி துவக்கிவைத்தார். டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் மட்டுமே இவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நாடு முழுவதும் மொத்தம் 1,440 சி.ஓ.சி.ஓ. பெட்ரோல் நிலையங்களைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து கிலோ சிலிண்டர் திட்டத்தை, அடிக்கடி இடம் பெயர்பவர்களுக்கும் அவசர உபயோகத்துக்கும் வரப்பிரசாதம் என்று மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக, தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பி.பி.ஓ. ஊழியர்கள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறுகிறார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x