Published : 17 Jan 2014 11:56 AM
Last Updated : 17 Jan 2014 11:56 AM
திட்டக்குழு, தன்னுடைய வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், ஐந்தாண்டுக்கொருமுறை NSS –ன் (National Sample Survey Organisation) நுகர்வோர் செலவினப்புள்ளி விவரத்தைக் கொண்டு வறுமையில் உள்ளோரை எண்ணிக்கையிலும், “தலை எண்ணிக்கை விகிதத்திலும்” ( Head Count Ratio ) கணக்கிடுகின்றது. அதாவது, வறுமைக்கோடு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தேவைகள் இல்லாத மக்கள், எண்ணிக்கையில் எத்தனை பேர், மக்கள் தொகையில் எத்துனை சதவீதம் என கணக்கிடப்படுகின்றது.
1973-74-ல், ஒவ்வொரு நூறு பேரில் 55 பேர் ஏழைகளாகக் கணிக்கப்பட்டார்கள். அது 1999-2000-ல் இந்தியாவில் 26 பேராகவும், தமிழ் நாட்டில் 21 பேராகவும் குறைந்துள்ளதாக திட்டக்குழு கணித்தது. நகர்ப்புற, கிராமிய வறுமையினை ஒப்பிடுகையில், தேசிய அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், தமிழ் நாட்டில் நகரத்தைவிட கிராமப்புறத்தில் வறுமை சற்று அதிகமாக இருந்தது.
பல பொருளியல் அறிஞர்கள் இதே NSS–ன் புள்ளி விவரத்தைக் கொண்டு திட்டக்குழுவின் மதிப்பீட்டைவிட வறுமை அதிகமாக உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். எனினும், அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் திட்டக்குழுவின் மதிப்பீடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
குறைந்தபட்ச உணவை மட்டுமே நமது அடிப்படைத் தேவை என்று திட்டக்குழு கூறுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உணவு, உடை, தங்குமிடம், குடிநீர் கல்வி, சுகாதாரம், வேலை போன்ற வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் அடிப்படை மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்புகளை இழந்திருக்கும் நிலையை வறுமை எனலாம். இந்த இழப்புகள் எவை எவை என்பதை உறுதிசெய்வதில் சுய உணர்வுகளை முற்றிலும் தவிர்க்க முடியாதென்றாலும், சமூக உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
அதாவது சமூகத்தால் உணரப்படக்கூடிய அடிப்படை மனித தேவைகளின் இழப்பே வறுமை ஆகும். இவை, உணவு, உடை, தங்குமிடம், கல்வி என பொருள் பரிமாணத்தை சார்ந்தவைகளாக இருக்கலாம்;. பாலியல் மற்றும் சாதி வேற்றுமைகள் போன்ற பொருள்சார் காரணங்களாகவும் இருக்கலாம். எனினும், அரசின் வறுமை கணக்கீட்டில் இவையனைத்தும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. பொருள் பரிமாணத்தில் கூட, நமது அடிப்படைத் தேவைகள் என சமுதாயம் எதிர்பார்க்கக்கூடிய அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
மேலும், திட்டக்குழு வறுமையினை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த சுழலில் வறுமை மதிப்பீடு செய்யும் முறையினை மறு ஆய்வு செய்ய சுரேஷ் டெண்டுல்கர் என்பவர் தலைமையில் ஒரு புதிய வல்லுநர் குழுவினை திட்டக்குழு அமைத்து, அக்குழு தனது அறிக்கையினை நவம்பர் 2009-ல் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் வறுமை தற்போது மதிப்பிடப்படுகின்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT