Published : 17 Nov 2025 07:16 AM
Last Updated : 17 Nov 2025 07:16 AM
சென்னை: தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும். எனவே, தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்று ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு கூறினார். நகரத்தார் வர்த்தக சபை (என்சிசி) மற்றும் இளம் தொழில் முனைவோரைக் கண்டறிதல் (யெஸ்) அமைப்பு சார்பில் ‘லான்ச் பேட் - 2025’ என்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், இளைஞர்கள் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து குடும்பத் தொழிலையே கவனிப்பதா அல்லது சுயமாக தங்களுக்கென ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதா அல்லது வேலைக்கு செல்வதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான இளம் தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் பேசும்போது “இன்றைய காலகட்டத்தில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 95 சதவீதம் தோல்வியை சந்திக்கின்றன. இது இயற்கை. நமது பிள்ளைகள் தொழிலில் ஈடுபடும்போது சந்திக்கும் ஆரம்ப
கட்ட தோல்விகளை பெற்றோர்கள் பெரிதுபடுத்தி, அவர்களது தன்னம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடாது.
தொழில் செய்வதற்கு வழி இல்லையென்றால்வேலைக்குச் செல்லலாம். ஆனால், நாட்டுக்கு கடமையாற்ற வேண்டும் என்று கருதினால், நிச்சயம் தொழில் தொடங்க வேண்டும். அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதுவே தேச சேவை” என்றார். ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு பேசும்போது, “தொழில் தொடங்குவது என்பது திட்டமிட்ட, பகுத்தறிவு சார்ந்த முடிவல்ல.
அது காதலில் விழுவதைப்போல உணர்வுப்பூர்வமான அழைப்பு. குடும்பத் தொழிலில் இணைந்தால் அது வாரிசு அரசியலாகி விடும். தனி அடையாளம் கிடைக்காது போன்ற எண்ணங்கள் எல்லாம் தேவையில்லாதவை. சலுகை பெற்ற குடும்பத்தில் பிறந்தது உங்கள் தவறு கிடையாது. இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
விடாமுயற்சிக்கும், பிடிவாதத்துக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. வெற்றி பெற்றால் உலகம் அதை விடாமுயற்சி என்று பாராட்டும். தோல்வியடைந்தால் பிடிவாதம் என்று சொல்லும். தொழிலை நீங்கள் உங்களுக்காக நடத்துகிறீர்கள். எனவே உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தோல்விகள் இருக்கும்.
தோல்வியில் இருந்து கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும். பிடித்தமானதை செய்யுங்கள். நல்ல அனுபவங்களைத் தேடி, வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்” என்றார். இந்நிகழ்வில், பிளாசம் பப்ளிக் பள்ளி நிறுவனர் அழகு.அழகப்பன், அட்வாண்டேஜ் புட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் தருண் மகாதேவன், என்சிசி தலைவர் உமா மெய்யப்பன், பொருளாளர் எம்.கண்ணன், நிர்வாகிகள் வள்ளியம்மை பழனியப்பன், ஆர்.எம்.கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT