Published : 17 Nov 2025 07:16 AM
Last Updated : 17 Nov 2025 07:16 AM
கோவை: அமெரிக்க வரி விதிப்பு நெருக்கடியை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது. மேலும், நூற்பாலைகள், விசைத்தறி, சாய ஆலைகளுக்கும் வரிச் சலுகையை பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் இந்தியாவில் ஜவுளித் தொழில் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரி விதிப்பு உத்தரவு 3 மாதங்கள் கடந்த நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள சலுகைகள் அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு பல்வேறு தொழில் அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி சலுகைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு தொழில் துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய மில்கள் சங்கத் (சைமா) தலைவர் துரை.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை ஏற்றுமதி செய்துவந்த இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள், இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் மீது திடீரென அமெரிக்கா அறிவித்த 50 சதவீத வரி விதிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
வரலாற்றிலேயே முதல்முறையாக உற்பத்தி நிறுத்தப்பட்டு, பல லட்சம் தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், கடன் மற்றும் வட்டியையும் செலுத்த முடியாமல் தொழில்துறையினர் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்தப் பிரச்சினையை சமாளிக்க, ஓராண்டுக்கு கடனை திரும்பச் செலுத்த காலஅவகாசமும், 30 சதவீத கூடுதல் கடனையும் வழங்குவதுடன், ஏற்றுமதி சலுகையையும் வழங்க ஜவுளித் துறையினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியைசெலுத்த, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள பெரிதும் உதவும். இதற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை நூற்பாலைகள், விசைத்தறிகள் மற்றும் சாய ஆலைகளுக்கும் பரிந்துரைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT