Published : 12 Nov 2025 04:27 AM
Last Updated : 12 Nov 2025 04:27 AM
சென்னை: செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில்தமிழக அரசுடன் இணைந்து கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் ஜெர்மனியின் சாக்சனி மாநில அரசு சார்பில் ‘தமிழ்நாடு - சாக்சனி இடையிலான வணிக மாநாடு - 2025’ சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் சாக்சனி மாநிலத்தின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் டிர்க் பான்டர், ஜெர்மனி துணைத் தூதர் மைக்கேல் ஹேஸ்பெர், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை செயலர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த உயர்மட்ட மாநாடு தமிழகம் மற்றும் சாக்சனி இடையிலான தொழில் துறை, புதுமை, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் எம்எஸ்எம்இ கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டு நடைபெற்றது.
ஜெர்மனியைச் சேர்ந்த 16 நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். மாநாட்டில் தமிழக அரசு செயலர் அதுல் ஆனந்த் பேசும்போது, “மரபுசாரா எரிசக்தி, காற்றாலை மின்சாரம், உள்ளிட்ட வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழகத்தில் தொழில் துறைக்கு வானமே எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் 11 சதவீத பொருளாதார இலக்கை எட்டியுள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே ஜெர்மனியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யலாம்” என்று அழைப்பு விடுத்தார்.
ஜெர்மனியை முந்தும் இந்தியா: தொடர்ந்து ஜெர்மன் அமைச்சர் டிர்க் பான்டர் பேசியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் சாக்சனியில் இருந்து தமிழகத்துக்கு வரும் மூன்றாவது உயர்மட்டக்குழு இதுவாகும். இந்த பயணத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களை மேலும் ஆராய்வதற்கு ஆவலாக இருக்கிறோம். எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ஒத்துழைப்பு, வணிக வாய்ப்புகள் மற்றும் திறமையான பணியாளர்களைக் கண்டறிவது. அந்த வகையில் முதல்கட்டமாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை நேற்று முன்தினம் (நவ.10) சந்தித்துப் பேசினோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமின்றி தொடர்ந்து தமிழகத்துடனான எங்களது உறவை வலுப்படுத்த திட்டமிட்டு, நுண் மின்னணுவியல் (மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ்), செமிகண்டக்டர்கள் துறைகளிலும், திறன் பணியாளர்களிலும் கவனம் செலுத்தவுள்ளோம்.
இதையொட்டி மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சென்னை ஐஐடியுடன் இணைந்து ஜெர்மனியின் டிரெஸ்டன் மற்றும் ஃப்ரைபெர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் பணியாற்றி வருகின்றன. இந்தியா ஏற்கெனவே உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது, விரைவில் அது ஜெர்மனியை முந்திவிடும். இதை நாங்கள் வரவேற்கிறோம், ஏனெனில் நாம் ஒன்றாக வளர விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT