Published : 11 Nov 2025 11:04 PM
Last Updated : 11 Nov 2025 11:04 PM
கோவை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு பாராட்டு விழா கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இன்று நடந்தது.
விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது, “கரோனா காலகட்டத்தில் கூட எந்த வரியையும் உயர்த்த பிரதமர் அனுமதிக்கவில்லை. வியாபாரிகள் குறித்து தனது குடும்ப உறுப்பினர் போல் பேச கூடியவர் பிரதமர். வருமான வரி உச்சவரம்பு குறித்து அதிகாரிகள் உட்பட பலரும் பல்வேறு கருத்துகள் கூறிய சூழலில் அனைவரது கருத்தையும் கேட்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பிற்கு பிறகு செப்டம்பர் 22 நவராத்திரி முதல் அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ‘ஈ காமர்ஸ்’ மூலம் 22 சதவீதம் வர்த்தகம் உயர்ந்துள்ளது. மாருதி நிறுவனத்தில் ஒரே வாரத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஹூண்டாய் நிறுவனத்தில் ஒரே நாளில் 11 ஆயிரம் டீலர் முன்பதிவு செய்தனர். 40.23 யூனிட் ஆட்டோமொபைல் விற்பனை நடைபெற்றுள்ளது. 31.05 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிராக்டர் விற்பனை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. காப்பீடு துறையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.‘ஏசி’, ‘டிவி’ போன்றவற்றின் விற்பனை உயர்ந்துளது. விழாவில் வியாபாரிகள் குறிப்பிட்ட அனைத்தையும் பிரதமரிடம் எடுத்துச் சொல்வேன்” என்றார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்லு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய நிதியமைச்சரை பாராட்டி பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT