Published : 07 Nov 2025 05:54 PM
Last Updated : 07 Nov 2025 05:54 PM
ராமேசுவரம்: பாம்பன் மீனவர் வலையில் அரிய வகையான கூறல் மீன்கள் இரண்டு சிக்கின. 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் ரூ.1,65,000-க்கு விற்பனையானது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு இன்று வெள்ளிக்கிழமை மீனவர்கள் கரை திரும்பினார்கள். இதில் மீனவர் வலையில் 22 கிலோ மற்றும் 24 கிலோ எடையில் இரண்டு கூறல் மீன்கள் சிக்கின. சுமார் 46 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.3,600 வீதம் ரூ.1,65,600-க்கு ஏலம் போனது.
கூறல் மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறும்போது, “இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவற்றை சுவையாகவும், கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது” என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT