Published : 07 Nov 2025 08:22 AM
Last Updated : 07 Nov 2025 08:22 AM
மும்பை: ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 12வது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:
பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்சினை பெரும் சர்ச்சையாகி வருகிறது. பெங்களூரில் உள்ள வங்கி மேலாளர் ஒருவர் வாடிக்கையாளருடன் கன்னட மொழியில் பேச மறுத்ததற்கு மாநில முதல்வரே கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் அந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு வங்கி மன்னிப்பு கேட்கும் நிலை உருவானது. வங்கிகளில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுவதால், அவர்கள் வாடிக்கையாளர்களுடன் மொழிப் பிரச்சினையை சந்திக்க வேண்டியுள்ளது. இது வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தகவல் தொடர்பு இடைவெளியை ஏற்படுத்திவிடுகிறது.
அனைத்து பணிகளையும் டிஜிட்டல் முறையில் செய்துவிடலாம், வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டுவிடலாம் என கூற முடியாது. வாடிக்கையாளர்களுடன் உள்ள நேரடி தொடர்புதான் இந்திய வங்கிகளின் பலம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ள மொழி முக்கியமானது. அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்தாலும், அவர்களின் சொந்த மொழியில் வங்கி ஊழியர்கள் பேசினால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT