Published : 04 Nov 2025 02:40 PM
Last Updated : 04 Nov 2025 02:40 PM
இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் 62% அதிகரித்துள்ளதாக தென்னாப்பிரிக்க தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய ஜி20 அமைப்பு சார்பில் நிபணர் குழு அமைக்கப்பட்டது. 2001-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில், ஜெயதி கோஷ், வின்னி பியானிமா, இம்ரான் வலோடியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் சமத்துவமின்மை என்பது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய அளவுக்கு (emergency levels) அதிகரித்துள்ளது. இது ஜனநாயக நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை, காலநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
2000-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் பெரும்பகுதி வசதிபடைத்தவர்கள் வசம் நோக்கியே பாய்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட செல்வங்களில் 41%, முதல் 1% பணக்காரர்கள் வசமே சென்றுள்ளது. அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட செல்வங்களில் 1%ஐ மட்டுமே உலக மக்களில் பாதி பேர் பெற்றுள்ளனர். இது சர்வதேச அவசரநிலையைக் காட்டுகிறது.
இந்தியா மற்றும் சீனா போன்ற பொருளாதாரங்கள் வளர்ந்ததால் நாடுகளுக்கு இடையேயான இடைவெளிகள் ஓரளவு குறைந்துள்ளன. எனினும், பெரும்பாலான நாடுகளில் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. உலகின் பாதி நாடுகளின் செல்வத்தைவிட அதிக செல்வத்தை உலகின் 1% செல்வந்தர்கள் கொண்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் உலக செல்வத்தில் 74%ஐ தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்திய செல்வந்தர்களில் முதல் 1 சதவீதத்தினரின் செல்வம் 2000 - 2023 காலகட்டத்தில் 62% அதிகரித்துள்ளது. சீனாவில் இது 54% ஆக உள்ளது.
தீவிர சமத்துவமின்மைக்குக் காரணம், அரசியலும் கொள்கைகளுமே. இது தவிர்க்க முடியாதது அல்ல. பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண சர்வதேச குழு அமைக்கப்பட்டதைப் போல, இந்த தீவிர சமத்துவமின்மைக்கு தீர்வு காணவும் ஒரு சர்வதேச குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழு சித்தாந்தங்களின் அடிப்படையில் அல்லாமல், தரவுகளின் அடிப்படையில் அரசாங்கங்களை வழிநடத்த வேண்டும்.
இந்த பிரச்சினை புறக்கணிக்கப்பட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். அதிக சமத்துவமின்மை உள்ள நாடுகளில் ஜனநாயகம் பலவீனமடைய 7 மடங்கு வாய்ப்புகள் அதிகம். 2000 முதல் வறுமை குறைப்பில் முன்னேற்றம் குறைந்துள்ளது. தற்போது 230 கோடி மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறார்கள். சுமார் 130 கோடி மக்கள் மருத்துவச் செலவுகளால் வறுமையில் தள்ளப்படுகிறார்கள். செல்வந்தர்களிடம் செல்வம் மேலும் மேலும் குவிவது சமூக அநீதி மட்டுமல்ல, கட்டமைப்பு ரீதியாகவும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதைச் சரி செய்ய பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அரசியல் நடவடிக்கையும் தேவைப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT