Published : 03 Nov 2025 07:13 AM
Last Updated : 03 Nov 2025 07:13 AM
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவின் பசவேஸ்வரநகர் பகுதியை சேர்ந்த சிறுமிகள் சாரதா, சம்யுக்தா, சிறுவன் நசிகேதன் ஆகியோர் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக பள்ளியில் 3 பேருக்கும் அண்மையில் காகித பை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 3 பேரும் ஒருமித்து முடிவு செய்தனர். இதற்காக எகோ வாலா என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சிறுமி சாரதா தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மேலாளராக நசிகேதனும் துணை மேலாளராக சம்யுக்தாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் சாரதா, நசிகேதன், சம்யுக்தா ஆகியோர் பெங்களூருவின் முக்கிய பகுதிகளில் காகித பை விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ.10 சந்தா செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை 2 காகித பைகளை அவரவர் வீடுகளுக்கு நேரடியாக சென்று சிறுமிகள் விநியோகம் செய்கின்றனர். கூடுதல் காகித பைகள் தேவைப்பட்டால் அவற்றை விநியோகம் செய்யவும் தயாராக உள்ளனர். ஒரு வாடிக்கையாளரிடம் 3 சிறாரும் தங்களது ஸ்டார்ட் அப் நிறுவனம் பற்றி எடுத்துரைக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. தாங்கள் தயாரிக்கும் காகித பையில் பசையை பயன்படுத்தவில்லை. கத்தரிக்கோலை பயன்படுத்தி காகிதங்களை வெட்டவில்லை என்று அவர்கள் வீடியோவில் விளக்கம் அளிக்கின்றனர்.
அதோடு விசிட்டிங் கார்டாக ஒரு துண்டிச் சீட்டில் மொபைல் போன் எண்ணை எழுதிக் கொடுக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா உட்பட பல்வேறு தரப்பினர் வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிறாரின் ஸ்டார்ட் அப் நிறுவனம் வளர்ச்சி அடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT