Published : 29 Oct 2025 12:59 PM
Last Updated : 29 Oct 2025 12:59 PM

திமுக, அதிமுகவால் ‘டேக் ஆஃப்’ ஆகாத மதுரை விமான நிலையம்!

மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்று வோம் என தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்து வந்த திமுக, அதிமுக இரு கட்சியினரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதுரை விமானநிலையத்தில் தற்போது 7,500 அடி நீளமே ஓடுபாதை உள்ளது. இதனால், சர்வதேச நகரங்களுக்கு இயக்கப்படும் பெரிய ரக விமானங்கள் வர முடியாததால் மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கும், ஓடுபாதையை 12,500 அடி நீளமாக நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஓடுபாதையை நீட்டித் தால் மதுரையில் இருந்து நேரடி யாகவே விமானங்கள் சர்வதேச விமானநிலையங்களுக்கு இயக்கப்படும், மதுரையும் சர்வதேச விமானநிலையமாகி விடும் என தென் மாவட்ட தொழில் முனைவோர், பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த கால் நூற்றாண்டாக மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் வைக்கும் முக்கிய வாக்குறுதி, மதுரையை சர்வதேச விமானநிலையமாக மாற்றுவோம், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்பதுதான்.

ஆனால், அதிமுக, திமுக எந்தக் கட்சியின் ஆட்சியிலும் மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய இரு கட்சிகளின் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை என்றும் மதுரை விமானநிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தூத்துக்குடி விமானநிலையமும், திருச்சி விமானநிலையமும் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சிகளின் தென் மாவட்ட, மத்திய மாவட்ட முக்கியப் பிரமுகர்கள் நினைப்பதாகக் கூறுகின்றனர்.

அப்படி முட்டுக்கட்டை போடவில்லை என்றால் திட்டமிடப்பட்ட மதுரை விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்து இந்நேரம் ஓடுபாதையை நீட்டித்து இருக்க வேண்டு மல்லவா? என்று மதுரை மாவட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்தும் கோரிக்கை நிறை வேற்றப்படாதது வேதனையே. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக 615 ஏக்கர் நிலம் வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது.

மீதி 450 ஏக்கரை மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். இப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன் வைத்துள்ளோம்.

இன்னும் 2 வாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும். இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறு வதற்கும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய விமானத்துறை அமைச்சரிடம் வைத்துள்ளோம்,’’ என்றார்.

அமைச்சர் கூறி 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன, ஆனால், இன்னும் மதுரை விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு பெறவில்லை. ‘எய்ம்ஸ்’-வரிசையில் விமானநிலைய விவகாரத்திலும் மத்திய அரசு மீது பழியைத் தூக்கிப்போட்டு தப்பிக்க முயலும் திமுக, ஏன் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது, என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரிடம் கேட்டபோது, ‘‘ஓடு பாதை விரிவாக்கப் பகுதியில் குண்டாறு கால்வாய் செல்வதால் மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தனியார் தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்கக் கோரியும் மாநில அளவிலான வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதல்வரிடம் வலி யுறுத்தியுள்ளேன்,’’ என்றார்.

அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஏதாவது ஒரு காரணத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சர்வதேச விமான நிலைய மாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை என மதுரை மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x