Last Updated : 25 Oct, 2025 04:50 PM

9  

Published : 25 Oct 2025 04:50 PM
Last Updated : 25 Oct 2025 04:50 PM

முதலீட்டு முடிவுகள் பற்றிய ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி உள்நோக்கம் கொண்டது: எல்ஐசி

புதுடெல்லி: ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி எல்ஐசியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

எல்ஐசியில் இருந்து சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ. 32,000 கோடி) அதானி குழுமங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் தயாரித்துள்ளதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை எல்ஐசி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்படுகின்றன என வாஷிங்டன் போஸ்ட் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்குப் புறம்பானவை. கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி ஆவணமோ அல்லது திட்டமோ எல்ஐசியால் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, விரிவான ஆய்வுக்குப் பிறகு சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதித்துறை அல்லது வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை.

எல்ஐசி மிக உயர்ந்த தர நிலையைக் கொண்டுள்ளது. அதன் அனைத்து முதலீட்டு முடிவுகளும் தற்போதுள்ள கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்க, அதன் அனைத்து பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன.

இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், எல்ஐசியின் வலுவான முடிவெடுக்கும் செயல்முறையை பாதிக்கக்கூடியதாக, அதன் நற்பெயருக்கும் பிம்பத்துக்கும், இந்திய நிதித்துறையின் அடித்தளங்களுக்கும் கேடு விளைவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x