Published : 22 Oct 2025 06:59 AM
Last Updated : 22 Oct 2025 06:59 AM
சிவகாசி: சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக சிவகாசி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
சிவகாசி பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்றதால், உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இதனால், கடந்த டிசம்பர் மாதமே பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது.
தொடர் வெடி விபத்து, தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், அதிகாரிகள் ஆய்வு, சிறு பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்தது.
ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகைக்கு மொத்த விற்பனை தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 20 வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 300 வகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்தன. உற்பத்தி குறைவால் தட்டுப்பாடு ஏற்பட்டு பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு 20 சதவீதத்துக்கும் மேல் விலை உயர்ந்தது. உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்த பட்டாசுகள் அனைத்தும் விற்பனையாகின.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சில்லறை விற்பனை பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்தாலும், விலை உயர்வு மற்றும் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதன் காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் (டான்பாமா) தலைவர் கணேசன் கூறும்போது, “டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியதால், வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT