Published : 22 Oct 2025 04:19 AM
Last Updated : 22 Oct 2025 04:19 AM
மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
10.5 கிலோ தங்கத்தில் (24 காரட்) வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடையின் மதிப்பு ரூ.9.5 கோடி ஆகும். விலை உயர்ந்த, அரிய வகை கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இது, துபாயின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்றும் உயர்தர ஆடைத் துறையில் புதுமைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
இது உலகின் கனமான தங்க ஆடை என கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆடம்பர ஆடை மற்றும் தங்க கைவினைப் பொருட்களின் உலகளாவிய மையமாக துபாய் திகழ்கிறது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் அல் ரோமைசான் கோல்டு நிறுவனம் வடிவமைத்த இந்த ஆடை, துபாயை அடுத்த ஷார்ஜாவில் நடைபெற்ற 56-வது மத்திய கிழக்கு வாட்ச் அண்ட் ஜுவல்லரி கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிரகாசமான தோற்றத்தைத் தாண்டி, இந்த ஆடை மத்திய கிழக்கு நாடுகளின் கலைநயத்தால் ஈர்க்கப்பட்ட நுணுக்கமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றில் செழிப்பு, அழகு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆடை வர்த்தக நோக்கத்துக்காக வடிவமைக்கப்படவில்லை. உலகம் முழுவதும் நடைபெறும் கண்காட்சிகள் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும். அதன்படி, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் நாகரிக ஆடை மற்றும் நகை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT