Published : 21 Oct 2025 09:18 AM
Last Updated : 21 Oct 2025 09:18 AM
பெங்களூரு: ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள சுப்ரமண்யபுரா காவல் நிலையம்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக கடந்த 2022 முதல் பணியாற்றி வந்தவர் கே.அரவிந்த். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி அன்று, தனது அடுக்குமாடி குடியிருப்பில் விஷம் அருந்தி அவர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த 6-ம் தேதி அவரது சகோதரர் அஸ்வின் கண்ணன், காவல் துறையில் புகார் அளித்தார்.
அவரது அறையில் அவர் கைப்பட எழுதி இருந்த 28 பக்க கடிதம் ஒன்று இருந்ததாகவும் தனது புகாரில் அஸ்வின் குறிப்பிட்டார். தனக்கு ஊதியம் வழங்காதது மற்றும் மேல் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் தனது முடிவுக்கு காரணம் என அதில் அரவிந்த் குறிப்பிட்டுள்ளதாக தகவல். மேலும், அரவிந்த் உயிரிழந்த இரண்டே நாட்களில் (செப்.30) அவரது வங்கி கணக்கில் ரூ.17.46 லட்சம் நெப்ட் (NEFT) முறையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அது தங்களுக்கு சந்தேகம் தரும் வகையில் அமைந்துள்ளது என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தரப்பில் உரிய விளக்கம் தராத காரணத்தால் அந்நிறுவனத்தின் மூத்த பொறியியல் அதிகாரி சுப்ரத் குமார் தாஸ், ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பவிஷ் அகர்வால் மற்றும் சிலர் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 108, சட்டப்பிரிவு 3(5)-ன் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல் துறை.
இந்நிலையில், தங்கள் நிறுவனம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் என்றும், அனைத்து ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பு சார்ந்த விஷயத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
தங்கள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதிகாரிகள் மீது பதிவாகி உள்ள வழக்கை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த அரவிந்த், தங்கள் நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றியதாகவும். அவரது பணி காலத்தில் பணி சார்ந்து அல்லது மேல் அதிகாரிகளின் அழுத்தம் சார்ந்து புகார் எதுவும் அரவிந்த் தெரிவித்தது இல்லை என்றும் ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது குடும்பத்துக்கு உரிய நிதி ஆதரவை வழங்கும் வகையில் தங்கள் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT