Published : 19 Oct 2025 12:12 PM
Last Updated : 19 Oct 2025 12:12 PM
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வணிக வளாகத்தில் உள்ள ஜவுளிக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
இதற்கு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜவுளிக்கடைகளே காரணம் என வணிக வளாக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர். மேலும் சாலையோர ஜவுளிக்கடைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று மாலை வணிக வளாக கடை உரிமையாளர்கள் ஈரோடு மணிக் கூண்டு அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஈரோடு டவுன் போலீஸ் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸார் மறியலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு முதல் மணிக்கூண்டு வரை சாலையோரம் ஏராளமான ஜவுளி கடைகளை அமைத்ததால், வணிக வளாகத்திற்குள் பொதுமக்கள் செல்வது குறைந்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து சிறு, ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையர், போலீஸ் எஸ்பி, ஆட்சியர் ஆகியோரிடம் தனித்தனியாக மனு அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மறியல் போராட்டம் தொடரும், என்றனர். அவர்களை சமரசம் செய்த காவல் துறையினர் சாலையை ஆக்கிரமித்து கடை அமைத்திருந்த வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையேற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் போக்குவரத்தை சீரமைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT