Published : 18 Oct 2025 05:52 PM
Last Updated : 18 Oct 2025 05:52 PM
புதுடெல்லி: ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோரை சென்றடைந்துள்ளதாகவும், 54 தினசரி பயன்பாட்டு பொருட்களின் நுகர்வை அரசு கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மத்திய அரசு கொண்டு வந்த மறுசீரமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி, 5%, 18% என 2 அடுக்குகளாக் குறைக்கப்பட்டன. ஜிஎஸ்டி மறு சீரமைப்பால், மக்கள் தினசரி பயன்படுத்தும் நுகர்பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “செப். 22 முதல் நாங்கள் மண்டலம் வாரியாக தகவல்களைப் பெற்று வருகிறோம். குறிப்பாக ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரு சக்கர வாகனங்கள், கார்கள், நுகர்வோர் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன. நுகர்வோருக்கு பலன்கள் சென்றடைந்துள்ளன.
மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 79,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 84,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, விற்பனை 5.5% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. பயணிகள் வாகன விற்பனை செப்டம்பரில் 3.72 லட்சமாக இருந்தது. டிராக்டர் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது. நவராத்திரியின் 9 நாட்களில் வாங்குவதும், விற்பதும் பரபரப்பாக இருந்துள்ளன.
நுகர்வோர் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை செப்.22 அன்றே இரட்டிப்பாகி உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சி விற்பனை 30-35% அதிகரித்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT