Published : 17 Oct 2025 09:30 AM
Last Updated : 17 Oct 2025 09:30 AM

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு உறுதி: பேரவையில் டிஆர்பி ராஜா திட்டவட்டம்

சென்னை: ‘ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு தமிழகத்துக்கு வருவது உறுதி’ என்று சட்டப்பேரவையில் அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் (குமாரபாளையம் தொகுதி) பி.தங்கமணி பேசியதாவது:எல்லா துறைகளிலும் கட்டணம் உயர்ந்துள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்து விட்டது. தொழிற் சாலைகளும் குறைந்து விட்டன. பிறகு எப்படி இரட்டை இலக்க வளர்ச்சி வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த சிஇஓதான் கூகுள் நிறுவனத்தில் உள்ளார்.

தற்போது கூகுள் நிறுவன முதலீடு ஆந்திரா சென்றுள்ளது. ஏன் தமிழகத்துக்கு கொண்டுவர முடியவில்லை. ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான உத்தரவாதம் அளித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அதனை அந்நிறுவனம் மறுத்திருப்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட அந்நிய முதலீடுகள் காரணமாக, இதுவரை இல்லாத அளவாக 14 ஆயிரம் பொறியியல் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. தனியார் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதுபோல, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடும் தமிழகத்துக்கு உறுதியாக வரும்.

பக்கத்து மாநிலத்துக்கு சென்ற முதலீடு தொடர்பாக குறைகூற விரும்பவில்லை. அதில் உள்ள அரசியல் அனைவரும் அறிந்ததே. உலக அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ‘‘முதல்வர் அண்மையில் வெளிநாடு சென்று திரும்பியபோது, இதுவரை 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் 32 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அப்படியானால் 28 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் டிஆர்பி.ராஜா, ‘‘28 லட்சம் அல்ல, 32 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசே தரவுகளை வெளியிட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x