Published : 15 Oct 2025 01:51 PM
Last Updated : 15 Oct 2025 01:51 PM
கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில் செயல்படும் அம்மா மூலிகை உணவகத்தில் தீபாவளி இனிப்புகள் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஸ்பெஷலாக பாலில் செய்த திருப்பதி பாலாஜி லட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல், ‘அம்மா மூலிகை உணவகம்’ செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவால் செயல்படுத்தப்படும் இந்த உணவகத்தில் காலை நேரத்தில் பல்வேறு வகையான மூலிகை சூப் வகைகள், அதன் தொடர்ச்சியாக கம்பங்கூழ் போன்ற திரவு உணவு வகைகள் விற்பனையாகின்றன.
மதிய நேரத்தில் சாப்பாடு, சைவ பிரியாணி, மாலை நேரத்தில் சுண்டல், மிளகாய் பஜ்ஜி என விதவிதமான உணவு வகைகள் விற்கப்படுகின்றன. மலிவான விலையில் சுவையான உணவுகள் இங்கு கிடைப்பதால், மாநகராட்சி அலுவலக ஊழியர்களில் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அம்மா உணவகத்தில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அம்மா மூலிகை உணவக பொறுப்பாளர் சுதா கூறியதாவது: தீபாவளியின் போது லட்டு, ரவா லட்டு, ஜிலேபி மற்றும் நெய் மைசூர்பா, கருப்பட்டி மைசூர்பா, அத்திப்பழ மைசூர்பா, பாதுஷா, பாதாம் கேக், முந்திரி கேக், காஜுகத்ரி, மில்க் ஸ்வீட் போன்ற இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம்.
அதோடு, பாசிப்பருப்பு லட்டு, எள் உருண்டை, தேங்காய் பர்பி போன்ற பாரம்பரியமான இனிப்பு வகைகள் மற்றும் மிக்சர் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம். இனிப்பு வகைகள் கிலோ ரூ.360 முதல் ரூ.900 வரையில் விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு சிறப்பு இனிப்பாக திருப்பதி பாலாஜி லட்டு அறிமுகம் செய்துள்ளோம். பாலில் செய்யப்படும் பூந்தியைக் கொண்டு இந்த பாலாஜி லட்டு தயாரிக்கப்படுகிறது.
அஜினமோட்டோ, பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தாமல் வீட்டு முறைப்படி இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. அதேபோல, நிறமிகளையும் குறைவாகவே பயன்படுத்துகிறோம். தரமான நெய் மற்றும் எண்ணெய் வகைகளைப் பயன்படுத்துவதால் சுவை கூடுகிறது.
அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயன வகைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் என பலரும் ஆதரவு தருவதால், கடந்த ஆண்டு 2,000 கிலோ இனிப்பு மற்றும் 600 கிலோ கார வகைகளை விற்பனை செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT