Published : 15 Oct 2025 12:21 AM
Last Updated : 15 Oct 2025 12:21 AM
சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.1,960 அதிகரித்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.92,640 ஆக இருந்தது. இதன்தொடர்ச்சியாக, நேற்று பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து, ரூ.94,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.245 உயர்ந்து, ரூ.11,825 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் பவுன் ரூ.1,03,200 ஆக இருந்தது. இதன்மூலம், வரலாறு காணாத புதிய விலை உச்சத்தை தொட்டது.
இதுபோல, நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206 ஆகவும், கட்டி கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து, ரூ.2,06,000 ஆகவும் இருந்தது. செப்.30-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000 ஆக இருந்தது. இது தற்போது (அக்.14) ரூ.2,06,000 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.45,000 வரை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, "சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி சிறிய முதலீட்டாளர்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT