Published : 10 Oct 2025 07:47 AM
Last Updated : 10 Oct 2025 07:47 AM
மும்பை: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இங்கிலாந்திலிருந்து ரூ.4,155 கோடியில் மார்லெட் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மும்பை வந்தார். அவருடன் 125 பேர் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரும் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ரூ.4,155 கோடியில் இங்கிலாந்து ஏவுகணைகளை வாங்குவது உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், “இங்கிலாந்திடமிருந்து மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும். மேலும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடிப்படையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த ஒப்பந்தத்தால் வடக்கு அயர்லாந்தில் 700 பேருக்கு வேலை கிடைக்கும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் கடற்படை கப்பல்களுக்கான மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்கள் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவும். இது இந்திய மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் உறவு, சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய தூணாக விளங்கும்” என்றார்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறும்போது, “இரு நாடுகளும் புதிய கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன. இது எதிர்காலத்தையும் அதனால் உருவாகும் வாய்ப்புகளையும் மையமாகக் கொண்டதாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT