Published : 09 Oct 2025 01:28 AM
Last Updated : 09 Oct 2025 01:28 AM
பெங்களூரு: பங்குத் தரகு நிறுவனமான ‘ஜெரோதா' சிஇஓ நிதின் காமத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.
இந்திய குடும்பங்களிடம் சுமார் 3 லட்சம் கோடி டாலர் (உலக தங்க கவுன்சில் மதிப்பீடு) மதிப்பிலான தங்கம் உள்ளது. அவை பயன்பாடு இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கிடையே, பங்கு முதலீடுகள், வளர்ச்சிக்கு மூலதனம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்றன. எனவே, தங்க கடன்களைத் தாண்டி, இந்த தங்கத்தை பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான சிறந்த வழிகள் தேவைப்படுகின்றன” என கூறியுள்ளார்.
இந்தப் பதிவுடன் தனது கருத்தை விளக்கும் வகையில், 1996 முதல் 2025 வரையில் தங்கம் மற்றும் நிப்டி 500 குறியீட்டின் வருவாயை ஒப்பிடும் ஒரு விளக்கப் படத்தை பகிர்ந்துள்ளார். உலகில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தில் 14% இந்தியாவில் உள்ளது.
இதில் இந்திய குடும்பங்களிடம் மட்டும் சுமார் 25 ஆயிரம் டன் தங்கம் இருக்கிறது. இதன் மதிப்பு நாட்டின் ஜிடிபியில் 56% ஆகும். உலகில் தங்கத்தை அதிகம் வைத்திருக்கும் அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட முதல் 10 நாடுகளிடம் உள்ள கையிருப்பைவிட இந்திய குடும்பங்களிடம் உள்ள இருப்பு அதிகம் என எச்எஸ்பிசி குளோபல் சமீபத்தில் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 876.18 டன் தங்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT