Published : 06 Oct 2025 12:04 AM
Last Updated : 06 Oct 2025 12:04 AM
புதுடெல்லி: பாஸ்டேக் இல்லாதவர்கள் யுபிஐ பயன்படுத்தினால், வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு செலுத்தினால் போதும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளில் உள்ள 1,150 சுங்கச்சாவடிகளில் தடையின்றி பயணிக்க ஏதுவாக பாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) கடந்த சுதந்திர தினத்தின்போது அறிமுகப்படுத்தியது. அன்றைய தினம் மட்டும் 1.40 லட்சம் வாகன ஓட்டிகள் இந்த வருடாந்திர பாஸை வாங்கினர். இதையடுத்து, வருடாந்திர பாஸ் திட்டத்துக்கு வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
இந்த நிலையில், பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் நவம்பர் மாதம் முதல் 1.25 மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு, பாஸ்டேக் வைத்திருக்கும் ஒருவர் ரூ.100 சுங்க கட்டணம் செலுத்துவார் என்றால், அவர் ரொக்கமாக செலுத்தும்போது ரூ.200 கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதேநேரம், யுபிஐ வசதியை பயன்படுத்தினால் ரூ.125 கட்டணம் (1.25 மடங்கு) செலுத்தினால் போதும்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், கட்டண வசூல் செயல்முறையை வலுப்படுத்தவும், சுங்க வசூலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலை பயனர்களின் பயணத்தை எளிதாக்குவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரி வித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT