Published : 04 Oct 2025 09:49 AM
Last Updated : 04 Oct 2025 09:49 AM
சென்னை: மிச்செலின் நிறுவனம் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்திருக்கிறது. இவை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான டயர் விற்பனையில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனமான மிச்செலின் இந்தியா நிறுவனம் தற்போது எஸ்யுவி, சேடன் கார்களுக்கான உயர்ரக டயர்களை முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரித்து, அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் விட்டோர் சில்வா, மேலாண்மை இயக்குநர் சாந்தனு தேஷ்பாண்டே,மிச்செலின் சென்னை ஆலை இயக்குநர் புளோரன்ட் சாசேட் ஆகியோர் கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 900 கிமீ விரைவுச் சாலை மட்டுமே இருந்தது. இன்றைக்கு 5 ஆயிரம் கிமீ மேல் விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2030-ம் ஆண்டுக்குள் விரைவுச் சாலைகள் 16 ஆயிரம் கி.மீட்டரை கடந்திருக்கும். இவை நகரங்களுக்கு இடையேயான தொலைவை குறைக்கின்றன.
உதாரணமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்கு 7 மணி நேரமாகும் நிலையில், விரைவில் பெங்களூருவுக்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதேபோல் டெல்லியிலிருந்து மும்பைக்கு சாலை வழியாகச் செல்ல 24 மணி நேரமான நிலையில் தற்போது 12 மணி நேரமாக குறைக்கும் வகையில் சாலை விரைவில் திறக்கப்படவுள்ளது.
இதுபோன்ற மாற்றம் இந்தியா முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய, பாதுகாப்பான உயர்ரக வாகனங்கள் அதிகளவில் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஆண்டு விற்பனையான கார்களில் 50 சதவீதம் எஸ்யுவி வகை கார்கள்தான். 2030-ம் ஆண்டுக்குள் எஸ்யுவி கார்கள் இந்தியாவை முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். பாதுகாப்பாகவும், வேகமாகவும் ஓர் இடத்துக்கு செல்வதற்கு இந்த கார்கள் உகந்தவை. இக்கார்களுக்கான டயர்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
எஸ்யூவி, சேடன் போன்ற கார்களுக்கான உயர்ரக டயர்கள் (16 முதல் 22 இன்ச் வரையிலானவை) முன்பு இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் முதல்முறையாக மிச்செலின் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த டயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் காரணமாக இவை நீண்டகாலம் நிலைத்திருக்கும் தன்மை கொண்டவை.
கார்பன் வெளியிடும் குறைவாக இருக்கும். இவை அடுத்த ஆண்டில் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இதற்காக கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டியில் மிச்செலின் டயர் உற்பத்தி ஆலை ரூ.2,800 கோடி முதலீட்டில் 225 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 54 ஆயிரம் டன் ரப்பரை பயன்படுத்தி டயர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT