Published : 04 Oct 2025 06:20 AM
Last Updated : 04 Oct 2025 06:20 AM
சென்னை: தீபாவளியை ஒட்டி கலைவாணர் அரங்கில் 15 நாட்கள் நடைபெற உள்ள தேசிய கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 50 சதவீதம் தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிப்பதற்கு கைத்தறி துறையால் தேசிய கைத்தறி கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து இந்த கண்காட்சியில், கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணங்களால் தனித்துவத்துடன் நெசவு செய்யப்பட்ட பேஸ்டல் கலெக் ஷன்ஸ், பூம்பட்டு, புதுமணப்பட்டு, பட்டு நூல் டிசைனர் சேலைகள், கட்டம் பட்டு, வெண்ணிலா கலெக் ஷன்ஸ், அனுதினப்பட்டு, பருத்தி நூல் யோகா மேட், தர்ப்பை புல் யோகா மேட், தாய்-சேய் பெட்டகம் போன்ற புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இக்கண்காட்சியில் கைத்தறி துறையின் கீழ் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், வெளி மாநில தலைமை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுடன் மத்திய, மாநில சிறப்பு முகமை நிறுவனங்களும் பங்கு பெற்றுள்ளன.
ஆர்கானிக் சேலைகள்: மேலும், இதில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் பட்டு, திருபுவனம் பட்டு, ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், அருப்புக்கோட்டை, நெகமம், செட்டிநாடு, கோரா காட்டன், செடிபுட்டா, மதுரை சுங்குடி, கூரைநாடு, காஞ்சி காட்டன், பரமக்குடி புதினம் மற்றும் ஆர்கானிக், டை–டை சேலைகள், மென்பட்டு சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், சென்னிமலை பெட்சீட், கரூர் பெட்சீட் மற்றும் ஏற்றுமதி ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் வெளி மாநிலங்களின் பிரசித்தி பெற்ற பனாராஸ், டசர், பைத்தானி, போச்சம்பள்ளி, மைசூர் பட்டு சேலைகளும், பெங்கால் காட்டன், வெங்கடகிரி காட்டன், ஒடிசா இக்கட், சந்தேரி, தந்துஜா, மிருக்னாயினி சேலைகளும், ஜம்மு காஷ்மீர் சால்வைகளும் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி வரும் 17-ம் தேதி வரை தினமும் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை 15 நாட்கள் கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
50 சதவீதம் வரை தள்ளுபடி: மேலும் கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கைத்தறி ரகங்களுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம்.மகேஷ் குமார், கைத்தறித் துறை அரசு செயலர் வே.அமுதவல்லி, இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதாராமு மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT