Last Updated : 29 Sep, 2025 05:53 PM

4  

Published : 29 Sep 2025 05:53 PM
Last Updated : 29 Sep 2025 05:53 PM

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிலை என்ன? - 19 மாதம் கடந்தும் மத்திய அரசு பரிசீலனை!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்ட மதிப்பீடு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. திட்டத்துக்கான ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஜூலையில் திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒப்புதல் அளிக்குமாறும் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அளித்த பதிலில், ‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் முதல்கட்ட பரிசீலனையில் இருக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்படவில்லை’ என தெரிவித்துள்ளது.

கான்பூர், ஆக்ரா, சூரத், பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒரு சில மாதங்களிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 19 மாதங்களாகியும் ஒப்புதல் வழங்காதது மத்திய அரசின் மெத்தனப் போக்கை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு மாநில அரசு மூலம் சமர்ப்பித்துள்ளோம். இதில் சில திருத்தங்களை மத்திய அரசு கேட்டது. அதையும் சரி செய்து அனுப்பி விட்டோம். ஆனாலும், தற்போது வரை மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் தொடர்ந்து பரிசீலினையில் வைத்துள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மட்டும் கூடுதல் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x