Published : 29 Sep 2025 07:51 AM
Last Updated : 29 Sep 2025 07:51 AM
புதுடெல்லி: வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் (க்யூஆர்எஸ்ஏஎம்), வாங்குவதற்கு ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டரை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சீனா மற்றும் துருக்கி அளித்த ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
அப்போது வான் பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி, அவற்றை நமது ராணுவம் நடு வானில் சுட்டு வீழ்த்தியது. தற்போது எல்லைப் பகுதியில் வான் பாதுகாப்பு கருவிகளை அதிகளவில் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
எதிரி நாட்டு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க ‘ஆனந்த் சாஸ்த்ரா’ என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் கூடிய வாகனம் (க்யூஆர்எஸ்ஏஎம்) ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ), பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தது.
இதில் 360 டிகிரி ரேடார், ஜாமிங் ஷீல்டு, லாஞ்சர் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. இது 30 கி.மீ தூரத்திலும், 6 முதல் 10 கி.மீ உயரத்திலும் வரும் எதிரிநாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழிக்கும்.
எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவத்தின் பீரங்கி படையினருக்கு தேவையான வான் பாதுகாப்பை அளிக்க இந்த க்யூஆர்எஸ்ஏஎம் வாகனங்கள் தேவைப்படுகின்றன. இதனால் 3 படைப் பிரிவுகளுக்கு தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் தயாரித்து கொடுக்க ராணுவம் ரூ.30,000 கோடி மதிப்பில் டெண்டர் விடுத்துள்ளது. ஒவ்வொரு படைப்பிரிவிலும் 9 வான் பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் இடம் பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT