Published : 26 Sep 2025 07:30 AM
Last Updated : 26 Sep 2025 07:30 AM
புதுடெல்லி: இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காக, எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 97 தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து எச்ஏஎல் நிறுவனத்துடன் ரூ.62,370 கோடிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று ஒப்பந்தம் செய்தது.
இந்த விமானங்களின் தயாரிப்பை 2027-28-ல் தொடங்கி 6 ஆண்டுகளுக்குள் விநியோகிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கைகள் கொண்டதாக இருக்கும். இந்த விமான தயாரிப்பில் 64 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு உதிரி பாகங்களாக இருக்கும்.
தேஜஸ் எம்1ஏ ரக விமானத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட ஆர்டரில் இருந்ததை விட கூடுதலாக 67 பாகங்கள் புதிய விமானங்களில் சேர்க்கப்படவுள்ளன. உள்நாட்டு தயாரிப்பு ஏஇஎஸ்ஏ ரேடார், ஸ்வயம் ரக் ஷா கவச் உட்பட பல உள்நாட்டு பாகங்கள் தேஜஸ் ரக விமானத்தில் இணைக்கப்படுவது தற்சார்பு நடவடிக்கையை வலுப்படுத்தும். தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்புவது உட்பட பல மேம்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இந்த விமான தயாரிப்பு திட்டத்தில் சுமார் 105 இந்திய நிறுவனங்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. நாசிக்கில் உள்ள எச்ஏஎல் நிறுவனத்தின் பிரிவில் 1,188 தொழில்நுட்ப நிபுணர்கள், 624 தொழில்நுட்ப உதவியாளர்கள், 395 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 2,207 ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமான தயாரிப்பில் ஈடுபடுவர்.
எச்ஏஏல் நிறுவனத்திடம் ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தேஜஸ் எம்1ஏ ரக விமானங்களுக்கான ஜிஇ-404 இன்ஜின் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டு வருகின்றன. இந்த இன்ஜின்கள் பொருத்தப்பட்டவுடன் போர் விமானம் டெலிவரி செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT