Published : 25 Sep 2025 06:30 AM
Last Updated : 25 Sep 2025 06:30 AM
புதுடெல்லி: கடந்த ஓராண்டாக பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்து வரும் நிலையில் சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும் என்று எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எச்எஸ்பிசி ஆய்வாளர் ஹெரால்டு வான் டெர் லிண்டே கூறியதாவது: கடந்த 2024 செப்டம்பரிலிருந்து இந்திய பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் பலவீனமான நிலையில் இருந்து வருகிறது. உலக சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்திய சந்தையின் செயல்பாடு மோசமாக உள்ளது. ஆனால், இந்த நிலை நீண்ட நாள் நீடிக்காது என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு கொள்கைகள் வளர்ச்சிக்கு ஆதரவான வகையில் உள்ளன. அதேபோன்று, வரிகள் குறைக்கப்பட்டது மக்களின் நுகர்வை அதிரிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நிறுவனங்களின் வருவாய் மேம்பட்டு விரிவாக்க திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு கணிசமான அளவில் உயரும்.
பணவீக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ரிசர்வ் வங்கியும் அதன் கொள்கைகளில் அவ்வப்போது தளர்வுகளை அறிவித்து வருவதும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் சந்தை ஏற்கெனவே இடர்பாட்டை சந்தித்துள்ள நிலையில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகள் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்நிய முதலீட்டு வரத்தும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.
வரும் காலங்களில் ஏராளமான அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையின் பக்கம் வரக்கூடும். இதுபோன்ற காரணங்களால், கூடிய விரைவில் பங்குச் சந்தைகள் வேகமெடுத்து சென்செக்ஸ் 94,000 புள்ளிகளை எட்டும் என்பதே சந்தை நிபுணர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு ஹெரால்டு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT