Published : 24 Sep 2025 01:00 AM
Last Updated : 24 Sep 2025 01:00 AM

ஒரே நாளில் 30,000 கார்களை விற்றது மாருதி - ஜிஎஸ்டி வரி குறைப்பால் வர்த்தகத்தில் எழுச்சி!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலான முதல் நாளில் மாருதி நிறுவனம் 30,000, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்று சாதனை படைத்தன. ஏ.சி., டி.வி. ஆகியவை 2 மடங்கு விற்பனையாகி வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நவராத்திரி முதல் நாளான கடந்த 22-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலானது. இதனால் கார்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, புதிய கார்கள் வாங்குவோர் உற்சாகமடைந்தனர். வரி குறைப்பு அமலான நேற்று முன்தினம் மட்டும் 30,000 மாருதி கார்கள் விற்பனையாகின. அதேபோல, ஹூண்டாய் நிறுவனம் 11,000 கார்களை விற்றது.

நவராத்திரி முதல் தீபாவளி வரை பண்டிகைக் காலமாகும். இத்துடன் ஜிஎஸ்டி வரி குறைப்பும் சேர்ந்துள்ளதால் கார் விற்பனை சராசரியைவிட 5 முதல் 6 மடங்கு வரை அதிகமாக உள்ளது. இதுகுறித்து மாருதி சுசுகி நிறுவன மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறும்போது, ‘‘கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கார் வாங்குவது பற்றி விசாரணைகள் நடைபெற்றன. ஏற்கெனவே 25,000 கார்கள் விற்கப்பட்ட நிலையில், ஒரே நாள் விற்பனை மட்டும் 30,000 ஆயிரத்தை எட்டியது.

கடந்த 18-ம் தேதி ஜிஎஸ்டி வரி குறைப்புடன் நாங்கள் கூடுதல் விலை குறைப்பை அறிவித்ததில் இருந்து நாளொன்றுக்கு 15,000 பேர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 75,000 பேர் கார்கள் வாங்க முன்பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமாகும். டீலர்கள் கார்களை டெலிவரி செய்வதற்காக நள்ளிரவு வரை ஷோரூம்களை திறந்து வைத்துள்ளனர்’’ என்றார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன இயக்குனர் தரூண் கார்க்கூறும்போது, ‘‘ஜிஎஸ்டி வரி குறைப்புமற்றும் நவராத்திரி தொடக்கம் காரணமாக, கார் சந்தையில் விற்பனை நன்றாக உள்ளது. ஒரே நாளில் எங்கள் டீலர்கள் 11,000 கார்களை விற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டில் மிக அதிகளவில் நடைபெற்ற ஒரு நாள் விற்பனை இதுதான்’’ என்றார்.

அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை மக்கள் அடையும் வகையில் குறைத்தன. மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனம் கூடுதல் தள்ளுபடிகளை அறிவித்தது. இதனால் மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரின் விலை ரூ.1.29 லட்சம் வரை குறைந்தது. மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகியவற்றின் விலை ரூ.2.56 லட்சம் வரை குறைந்தது. டாடா பஞ்ச் மற்றும் கியோ சிராஸ் ஆகியவற்றின் விலை ரூ.1.6 லட்சம் வரை குறைந்தது.

கடந்த சில மாதங்களாக மிகவும் மந்தமாக இருந்த கார் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகனங்களின் ஆண்டு விற்பனை 5 முதல் 7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நேற்று முன்தினம் ஏ.சி. மற்றும் டி.வி. விற்பனையும் அதிகரித்தன. ஏ.சி மற்றும் டி.வி.களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோ ரூம்களிலும், இ-வர்த்தக தளங்களிலும் அதிகளவில் ஏ.சி. மற்றும் டி.வி.க்களை வாங்கினார். இதனால் இவற்றின் விற்பனை 2 மடங்கு அதிகரித்ததாக ஹேயர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சதீஷ் கூறினார்.

ஏ.சி வாங்குவது குறித்து வாடிக்கையாளர்கள் அதிக அளவில் விசாரிப்பதால், செப்டம்பர் மாத விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையைவிட 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் எம்.டி.தியாகாரஜன் கூறினார். டி.வி.க்களில் குறிப்பாக, 43 அங்குலம் முதல் 55 அங்குலம் வரையிலான டி.வி.க்களின் விற்பனை அதிகரித்தது.

நேற்று முன்தினம் முதல் நாள் விற்பனை 30 முதல் 35 சதவீதம் அதிகரித்ததாக சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். இவற்றில் அதிக அளவு பிளிப்கார்ட் மூலம் நடைபெற்றுள்ளது. இ-வர்த்தக தளங்கள் அதிகளவிலான தள்ளுபடி வழங்கியதால், இவற்றில் அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விற்பனையும் அதிகரித்தன.

பெரும்பாலான பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைந்ததால், ஏராளமான பொருட்களின் விலைகள் மாற்றியமைக் கப்பட்டன. இந்துஸ்தான் லீவர் உட்பட முன்னணி நிறுவனங்கள் சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் விலைகளைக் குறைத்தன. பண்டிகை காலத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x