Published : 22 Sep 2025 04:03 PM
Last Updated : 22 Sep 2025 04:03 PM
சென்னை: தங்கம் விலை இன்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை இன்று (திங்கள்கிழமை) காலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. சென்னையில் காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360-க்கும், பவுனுக்கு ரூ.560 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.82,880-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் பிற்பகல் நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,430-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.83,440-க்கும் விற்பனை ஆகிறது.
ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு என பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம். வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.148-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,48,000-க்கு விற்பனை ஆகிறது.
பண்டிகை காலம் தொடக்க நாளிலேயே...! இன்று நவராத்திரி பண்டிகையின் முதல் நாள், இன்று முதல் தீபாவளி வரையிலும் இந்தியாவில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. தீபாவளி முடிந்ததுமே திருமண முகூர்த்த காலம் தொடங்கும். வழக்கமாகவே பண்டிகை, சுபமுகூர்த்த காலங்களில் தங்கம் விலை சற்றே உயர்வதுண்டு. இந்த ஆண்டு ஏற்கெனவே பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் பண்டிகை காலத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை அதிரடி காட்டியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்க நகை செய்கூலி, சேதாரம் இல்லாமலேயே ரூ.1 லட்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT