Published : 22 Sep 2025 08:36 AM
Last Updated : 22 Sep 2025 08:36 AM
புதுடெல்லி: மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 5%, 12%, 18%, 28% என 4 அடுக்குகளாக இருந்தது.
இதில் பல்வேறு பொருட்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 4-லிருந்து 2 அடுக்காக குறைக்கப்படும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
இதையடுத்து, இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பு திட்டத்துக்கு அதன் கவுன்சில் ஒப்புதல் வழங்கியதுடன் நவராத்திரி விழாவின் தொடக்க நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, இனி 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். ஏற்கெனவே 28% வரி விதிப்பின் கீழ் இருந்த 90% பொருட்கள் 18% வரி விகிதத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளன. இதனால், உணவுப் பொருட்கள், வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 375 பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
நெய், பன்னீர், வெண்ணெய், ஜாம், உலர் பழங்கள், காபி மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்கள் விலை குறைந்துள்ளது. இதுபோல, டி.வி., ஏ.சி., வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. பெரும்பாலான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி 5% ஆக குறைந்துள்ளதால் அவற்றின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளது. சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி 28%-லிருந்து 18% ஆக குறைந்துள்ளதால் வீடு கட்டுவோர் பயனடைவார்கள்.
வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளதால், புதிதாக வாகனம் வாங்குவோர் அதிக அளவில் பயனடைவார்கள். உடற்பயிற்சி மையங்கள், முடி திருத்தும் நிலையங்கள், யோகா பயிற்சி மையங்கள் உள்ளிட்ட சேவைத் துறைக்கான ஜிஎஸ்டி 18-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சோப்பு, ஷாம்பு, டூத்பிரஷ், டூத்பேஸ்ட், ஷேவிங் கிரீம், டால்கம் பவுடர் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி 12 மற்றும் 18-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 375 பொருட்கள் விலை குறைந்தது. இதனால் பொதுமக்களின் நுகர்பொருள் செலவு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT